தர்மபுரி:வேலுார் மாநகராட்சி பாணியில், தர்மபுரி அரூர் அருகே மின்கம்பத்தின் மீது கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை இடையே, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், 410 கோடி ரூபாய் மதிப்பில், 48.44 கி.மீ., துாரத்திற்கு இருவழிச்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை கடந்த, ஜூன், 19ல் அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அரூரில் இருந்து, மொரப்பூர் செல்லும் வழியில், நேதாஜி நகர் அருகில், சாலையோரத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. அங்குள்ள மின்கம்பத்தை அகற்றாமல் ஒப்பந்ததாரர் அவசர கதியில் கழிவு நீர் கால்வாயை அமைத்துள்ளார். இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவங்களில் இருந்து, சாலை, கால்வாய் பணிகள் நடைபெறும் இடங்களை, அதிகாரிகள் எட்டிக்கூட பார்ப்பதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஏற்கனவே, வேலுார் மாநகராட்சியில், ஒரு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது சாலை அமைத்தும், போர்வெல் அகற்றப்படாமல் வடிகால் அமைத்தும் அதிகாரிகள் கெத்து காட்டிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.