ஆமதாபாத்: '' ஊழலை தடுத்து நிறுத்தியதால், முறைகேடு செய்தவர்கள் என்னை விமர்சிக்கின்றனர்'', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபைக்கு இரண்டாம் கட்டமாக வரும் 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பன்ஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தாமதபடுத்துதல், தடுத்து நிறுத்துதல் மற்றும் தவறாக வழிநடத்துதல் ஆகியவற்றில் மட்டுமே காங்கிரசின் கொள்கையாக உள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிக்கு நர்மதா தண்ணீரை காங்கிரஸ் கொண்டு வந்ததா என்பதற்கு இப்பகுதி வயதானவர்கள் பதில் சொல்வார்கள். உண்மையில், அவர்கள் ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. பன்ஸ்கந்தா பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவதை தடுக்கும் பாவத்தை செய்தவர்களை மன்னிக்கலாமா?
இந்த பகுதி தாகத்தினால் தவித்ததற்கு காங்கிரஸ் தான் காரணம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தேர்தலின் போது அதனை செய்வீர்கள் என நம்புகிறேன்.

தங்களுக்கு பணம் கிடைக்காது என தெரியும் பணிகளை செய்ய காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இந்த பகுதிக்கு காங்கிரசால் தண்ணீர் வழங்க முடியவில்லை. இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைத்தால், தங்களுக்கு சட்ட விரோதமாக பணம் கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும். இதனால் அக்கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்தது பா.ஜ., ஆட்சிதான். விடுபட்ட பகுதிகளுக்கும் விரைவில் தண்ணீர் கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சியில், கைவிடப்பட்ட பகுதிகளில் தண்ணீர் கிடைக்கும் வகையிலான திட்டங்களுக்கு பா.ஜ., ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது.

ஏழைகளுக்கான உணவு தானியங்கள் வேறு நபர்களுக்கு திருப்பி விடப்பட்டன. ஏழை மக்களை நீங்கள் கொள்ளையடித்தால், மோடி நடவடிக்கை எடுப்பார். அவ்வாறு தவறு செய்தவர்கள் தற்போது பிடிபட்டு வருகின்றனர்.
இதனால், அவர்கள் என்னை திட்ட துவங்கி உள்ளனர். நான்கு கோடி போலி ரேசன் கார்டுகள் ரத்து உள்ளிட்ட முறைகேடுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை மக்களை கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சனம் செய்கின்றனர்.

முதல்கட்ட தேர்தலில் மக்கள் ஓட்டளித்ததை பார்த்த போது, இந்த தேர்தலிலும் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.