வேலுார்: தமிழகத்தில் 48 ஆயிரம் இணைய வழி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறினார்.
வேலுார் மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 56 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட அதிநவீன நடமாடும் கண்காணிப்பு வாகனம் வேலுார் போலீஸ் துறைக்கு ஒப்படைக்கும் விழா இன்று நடந்தது.இந்த வாகனத்தில் 360 டிகிரி சுழலக்கூடிய கேமராக்கள் நான்கு புறமும் ஆறு பொருத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் கேமரா உள்ளது. இந்த வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து இரண்டு கி.மீ., துாரம் வரை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ளது. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல் மூலம் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.
இதிலுள்ள கேமாராக்கள் வாகனங்கள், நம்பர் பிலேட்டுக்களை படம்பிடிப்பது மட்டுமல்லாமல், கலெக்டர், எஸ்.பி., அலவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பட்டு அறைக்கு நேரடியாக காட்சிகள் வழங்கும்.
இதில் ஜெனரேட்டர் வசதி உள்ளது. செயற்கைகோள் இணைப்புக்களுடன் கூடிய அனைத்து வசதிகளும் இதில் உள்ளது.பழைய குற்றவாளிகள், ரவுடிகள் புகைப்படம் இதில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் நடமாட்டத்தை எளிதில் கண்டுபிடித்து குற்ற சம்பவங்களை தடுத்து விடலாம்.
வேலுார் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த வாகனத்திற்கு வேலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் பூஜை போட்டு தொடங்கி வைத்தனர். பின் இந்த வாகனம் வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவிடம் வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி, ராஜேஷ் கண்ணன், மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குஅசோக்குமார், வேலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் டி.ஜி.பி., சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய நடமாடும் கண்காணிப்பு வாகனம் வேலுார் போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் முதலில் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழாவிற்கு அனுப்பி மக்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு பணியில் பயன்படுத்தப்படும். தமிழகத்தில் 48 ஆயிரம் இணைய வழி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் போலீஸ் துறை சிறப்பாக செயல்படுகிறது.
கஞ்சா, போதை பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாதம் குறித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.