மதுரை: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு, இந்து சமய அறநிலையத்துறைக்கு பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் மொபைல்போன் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் மொபைல்போன் வைக்கும் வகையில், பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தடையை மீறி மொபைல்போன் கொண்டு வரப்பட்டால், பறிமுதல் செய்யப்பட வேண்டும் என விளம்பர பலகைகள் வைக்க வேண்டும்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், தமிழகத்தின் பண்பாடு, மரபினை காக்கும் வகையில் ஆடை அணிந்து வர வேண்டும் என்றும் விளம்பர பலகைகள் வைப்பதுடன், மொபைல்போன் தடை தொடர்பாக கோயிலில், ஒலிபெருக்கி மூலம் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் நடைமுறைகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.