ஊத்துக்கோட்டை:அதிகளவு வாகனங்கள் செல்லும் ஊத்துக்கோட்டை - ஆரணி ஆற்றின் மேல் போடப்பட்டுள்ள பாலத்தில், மின் விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக,- ஆந்திர எல்லையில் உள்ளது, ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அத்தியாவசித் தேவைக்கு, ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.
இங்கிருந்து கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு, இப்பகுதி மக்கள், திருவள்ளூர் செல்கின்றனர்.
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், திருவள்ளூர் செல்ல, அங்குள்ள ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.
மழைக்காலங்களில், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, ஒரு மாதத்திற்கு மேலாக போக்குவரத்து தடைபடுகிறது.
இதனால், பெரியபாளையம், வெங்கல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர் ஆகிய ஊர்களை சுற்றி செல்ல வேண்டும். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் பாலம் அமைக்க, 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தற்போது பணிகள் முடிந்து, வாகனங்கள் செல்கின்றன.
ஆனால், இந்த பாலத்தில் மின் விளக்குகள் அமைக்காததால், இரவு நேரங்களில், வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தான் செல்கின்றனர்.
இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் உள்ள பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.