பொன்னேரி:பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில், சப் - -கலெக்டர் அலுவலகம், நீதிமன்றங்கள், வட்டாட்சியர் அலுவலகம், சார் - பாதிவாளர் அலுவலகம் ஆகியவை அமைந்து உள்ளன.
மேற்கண்ட அலுவலகங்களுக்கு வார நாட்களில், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் வந்து செல்கின்றனர்.
பொன்னேரி ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையாகவும், இது உள்ளது. ரயில் நிலையத்திற்கு சென்று வரும், பயணியர், கல்லுாரி மாணவர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், மேற்கண்ட சாலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் கிடக்கின்றன.
இதனால், சிறு மழை பெய்தாலும், சாலை சகதியாக மாறிவிடுகிறது. பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் சிரமத்துடன் சாலையில் பயணிக்கின்றனர். வயதானவர்கள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.
நேற்று காலை, 10 நிமிடங்கள் பெய்த மழையால், சாலை முழுதும், சகதியாக மாறி விட்டது. பல்வேறு தரப்பினர் வந்து செல்லும் தாலுகா அலுவலக சாலையை, துரிதமாக சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.