கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில், சாலையோர மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணிகள், நவம்பர் முதல் வாரம் துவங்கப்பட்டது.
கால்வாய்க்காக, தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரம், 50 மீட்டர் நீளத்திற்கு, ஆறு அடி ஆழ பள்ளம் எடுக்கப்பட்டது.
ஒரு மாதம் முன், பள்ளம் எடுக்கப்பட்டதோடு, பணிகள் கிடப்பில் போடப்பட்டன. எந்த பாதுகாப்பு வளையமும் இன்றி, சாலையோரம் அபாயகரமாக உள்ள அந்த பள்ளத்தை கண்டு, வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.
வாகனங்கள் சற்று தவறினால், பள்ளத்தில் கவிழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பள்ளத்தை சுற்றி, பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, துரிதமாக பணிகளை முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.