திருவாலங்காடு:திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில், குற்றச் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, இரவு, பகலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில், திருவாலங்காடு நான்கு முனை சந்திப்பில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில் நிலையம் செல்ல, அந்த வழியாக பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், ஓட்டுனர் உரிமமின்றி வந்தார். மேலும், அவர் தலை முடிக்கு 'கலரிங்' செய்து, ஒற்றை காதில் தோடு அணிந்து இருந்தார்.
இதை கண்ட இன்ஸ்பெக்டர், அந்த இளைஞரிடம், 'இளைஞர்கள் தான் சிறுவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். உன்னை பார்த்து பள்ளி சிறுவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவர். எனவே, இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்' என, அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து, அந்த இளைஞர், தோடை கழற்றியதுடன், தலைமுடியை வெட்டி விடுவதாகவும் கூறினார். இதையடுத்து, வாகனம் வழங்கப்பட்டு, இளைஞர் அனுப்பி வைக்கப்பட்டார்.