பழ.சுந்தரமூர்த்தி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின், பெயருடன் ஜாதி பெயர்களை பயன்படுத்த தடை விதித்தார். இந்த தடையை, அனைவருக்கும் ஒரே மாதிரியாக பயன்படுத்தினால், அவரின் எண்ணத்தை மெச்சலாம். ஆனால், ஆளுக்கும், ஜாதிக்கும் தகுந்தார் போல பயன்படுத்துவது தான் தவறானது. அந்தத் தவறையே 'திராவிட மாடல்' ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர்.
கோவைக்கான தி.மு.க., பொறுப்பாளராக, பையா கவுண்டர் என்பவரை நியமித்தார்; அவரின் இயற்பெயர் கிருஷ்ணன். ஆனால், அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டிகளில், அவரின் பெயரை, 'பையா' என்று பயன்படுத்துகின்றனர். இது, மரியாதை குறைவாக இருப்பதாக, ஒரு தரப்பினர் நினைக்கின்றனர்.
அதேபோல, தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் என்ற பெயரை, உ.வே.சாமிநாதன் என்று மாற்றினர். இவர், தமிழுக்கு ஆற்றிய தொண்டை தமிழ் கூறும் நல் உலகம் நன்கறியும்.
எண்ணற்ற ஏட்டுச் சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து, அதைப் பாதுகாத்து, பதிப்பித்து அழியாவண்ணம் காப்பாற்றிய பெருமை இவரையே சேரும். அதேபோல, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையை, வ.உ.சிதம்பரனார் என்று குறிப்பிடுகின்றனர்.
இதே நடைமுறையை, 'பசும்பொன் முத்துராமலிங்க தேவர்' குருபூஜை நிகழ்விலும் பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், தமிழக அரசின் இலச்சினையுடன் வெளியிடப்பட்ட குருபூஜை விளம்பரத்தில், 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், 115வது குருபூஜை விழா' என்றே குறிப்பிட்டிருந்தனர்.
எல்லா ஜாதியினரையும் சமமாக மதிக்கும் நேர்மையான அரசு என்றால், என்ன செய்திருக்க வேண்டும்... பசும்பொன் முத்துராமலிங்கம் என்றல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும்? தேவர் என்ற பெயரை குறிப்பிடாமல் விட்டால், அந்த சமூகத்தினரின் ஓட்டு வங்கியை இழந்து விடுவோம் என்ற பயமே இதற்கு காரணம்.
மேலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்யும் போதும், கட்சிக்கான மாவட்ட செயலர்களை நியமிக்கும் போதும், ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியினர் அதிகம் வசிக்கின்றனரோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவரையே தேர்வு செய்கின்றனர்.
கருணாநிதியின் துணைவியாரை இன்றளவும் ராஜாத்தி என்று தானே அழைக்கின்றனர். ராசாத்தி என்றல்லவா மாற்றியிருக்க வேண்டும்? இதே நடைமுறையை பின்பற்றி, 'ஸ்டாலின்' என்பதை, 'சுடாலின்' எனவும், அன்பில் மகேஷ் என்பதை, 'அன்பில் மகேசு' என்றும் மாற்றி இருக்கலாமே... இதுவரை அதை ஏன் செய்யவில்லை?
தங்களுக்கு ஒரு சட்டம், பிறருக்கு ஒரு சட்டம் என்ற ரீதியில், தி.மு.க.,வினரும், முதல்வரும் செயல்படுவது, எந்த விதத்தில் நியாயம்? மேலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற மமதையுடன் செயல்படுவதும் நல்லதல்ல... தி.மு.க., ஆட்சியாளர்களின் கபட நாடகத்திற்கு, விரைவில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பர்.
ஆதீனங்கள் மடாதிபதிகள் போராட வேண்டும்!
எம்.ரவிச்சந்திரன், புதுபெருங்களத்துார், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அர்ச்சகர்களின்
பயிற்சி காலம், ஐந்தாண்டிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டது சரியல்ல. வேத
மந்திரங்களை துல்லியமாக பயின்று, ஓராண்டில் தேர்ச்சி பெறுவது
சாத்தியமானதல்ல; அர்ச்சகர் பயிற்சி, சிகை அலங்கார பயிற்சி போன்றதும் அல்ல.
ஆகம
விதிகள் அனைத்தையும், ஐந்து ஆண்டுகளில் தெரிந்து கொள்வது மிக மிக கடினம்.
பிற மத விவகாரத்தில் தலையிட அஞ்சும் திராவிட மாடல் அரசு, ஹிந்துக்களின்
பண்பாடு, கலாசாரம் போன்றவற்றிலும், ஹிந்து மத சம்பிரதாயங்களிலும், அடிக்கடி
தலையிடுவது சரியல்ல.
காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும், ஹிந்து மத சடங்குகளை அரசு மாற்ற நினைப்பதும் வேதனை அளிக்கிறது.
அண்டை
மாநிலமான ஆந்திராவிலும், கேரளாவிலும், ஹிந்து மதம் சார்ந்த மரபுகளை மாற்றி
அமைக்க ஆட்சியாளர்கள் பயப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும்
கலாசாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய துணிவு, ஆட்சியாளர்களுக்கு எங்கிருந்து
வருகிறது என்பது தான் கேள்வி...
'ஆட்சியாளர்களாகிய நாம் எது
செய்தாலும், ஹிந்துக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்; ஒன்றும்
செய்யமாட்டார்கள்' என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு செயல்படுகின்றனர்; அதற்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எனவே, ஹிந்து மதத்தையும்,
ஹிந்துக்களையும் அடிக்கடி சீண்டி வரும், திராவிட மாடல் அரசுக்கு பாடம்
கற்பிக்க வேண்டும் எனில், தமிழகத்தில் உள்ள ஆதீனங்களும், மடாதிபதிகளும்,
ஹிந்து மத தலைவர்களும், ஹிந்து சமூக மக்களும் வீதியில் இறங்கி போராட
வேண்டும். அப்போது தான், ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்கும்; ஆட்சியாளர்களின்
கொட்டமும் அடங்கும்.
கூட்டணிக்கு 'ஜால்ரா' போட்டால் அம்போ தான்!
த.யாபேத்தாசன்,
ஆசீர்வாதபுரம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
சமீபத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன... ஒன்று,
ராஜிவ் படுகொலை வழக்கின் குற்றவாளிகள் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டது;
மற்றொன்று, பொருளாதார அடிப்படையில், உயர் ஜாதியினருக்கு வழங்கப்பட்ட, ௧௦
சதவீத இடஒதுக்கீடு செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பொருளாதாரத்தில்
நலிந்த பிரிவினருக்கான, ௧௦ சதவீத இடஒதுக்கீட்டை, காங்கிரஸ் கட்சி
ஆதரிக்கிறது. அதேநேரத்தில், ராஜிவ் படுகொலை குற்றவாளிகள் ஆறு பேர்
விடுதலையை, அவர்களால் ஆதரிக்க முடியவில்லை. ஆனால், காங்., கூட்டணி கட்சியான
தி.மு.க., ௧௦ சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது; ஆறு பேர் விடுதலையை
ஆதரிக்கிறது.
இப்படி இரு விஷயங்களில், காங்கிரசுக்கும்,
தி.மு.க.,வுக்கும் இடையே முரண்பாடு இருந்தாலும், 'கொள்கை வேறு; கூட்டணி
வேறு' என்கிறார், தமிழக காங்., தலைவர் அழகிரி. இப்போதைக்கு காங்கிரசின்
கொள்கை, ஒன்றே ஒன்று தான்... அதாவது, மோடி எதிர்ப்புக்காக, சிறுபான்மையினர்
ஓட்டுக்காக, தி.மு.க., உடனான கூட்டணியை தொடர்வது தான்.
இப்படி பல
விஷயங்களில் கூட்டணிக்காக, தங்களின் கொள்கையை விட்டுக் கொடுத்து, காங்கிரஸ்
கட்சி செயல்படுவதால் தான், மத்தியில் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும்
ஆட்சியை பறிகொடுத்து, மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
'நீட்'
தேர்வு விஷயத்தில், தி.மு.க.,வினர் பேச வேண்டிய விஷயங்களை, லோக்சபாவில்
பேசியதன் வாயிலாக, ஒரு மாநில கட்சியின் தலைவர் போல, தன்னை காட்டிக்
கொண்டவர் ராகுல்.
இனியாவது, காங்., தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அதை நிறைவேற்ற, அல்லும் பகலும் பாடுபட வேண்டும்.
அப்போது
தான், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியும். இல்லையேல், ஒவ்வொரு
மாநிலத்திலும், கூட்டணி கட்சிகளுக்கு ஜால்ரா போட்டு, கிடைக்கும் சில,
'சீட்'டுகளுடன் காலத்தை தள்ளுவதை தவிர வேறு வழியில்லை.