'ஜி - 20' அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதையும், அடுத்த ஆண்டு, ஜி - 20 மாநாட்டை புதுடில்லியில் பிரமாண்டமாக நடத்த இருப்பதையும், பா.ஜ., மாபெரும் சாதனையாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதன் பலனை, 2024 பொதுத் தேர்தலில் அறுவடை செய்வது குறித்து, உயர்மட்ட குழுவை கூட்டி இரண்டு நாள் தீவிர ஆலோசனை நடத்தவும் கட்சி திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் சக்திவாய்ந்த 20 நாடுகள் அங்கம் வகிக்கும், 'ஜி - -20' அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும், இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது.இந்த பொறுப்பு, சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஜி - 20 மாநாட்டின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
முக்கிய நிகழ்வுகள்
இதையடுத்து, டிச., 1 முதல் ஜி - 20 அமைப்புக்கான தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அடுத்த ஆண்டு மாநாடு நடந்து முடியும் வரை, இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
இதையடுத்து, இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளை, புதுடில்லியில் மட்டும் நடத்தாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் பரவலாக நடத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளதை மிகப்பெரிய சாதனையாக கொண்டாட பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதை அரசியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது குறித்து ஆலோசனைகளும் சூடுபிடித்துள்ளன.
வரும் 5ம் தேதி குஜராத் சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் அதே நாளில், 2024 லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து ஆராய, பா.ஜ., உயர்மட்டக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் 5ம் தேதியன்று, புதுடில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பா.ஜ., உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் மதிய உணவுடன் துவங்கவுள்ளது. இந்த கூட்டம், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தலைமையில் இரண்டு நாட்களுக்கு நடக்கிறது.
இதில், மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை எந்தளவுக்கு சென்றடைந்துள்ளன என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
என்றாலும், ஜி - -20 மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி, அதன் பலன்களை அறுவடை செய்வதற்காக திட்டமிடுவது தான் இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், மத்திய அரசு இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளத் துவங்கிவிட்டது. இந்த மாநாட்டின் தலைமை பொறுப்பு நமக்கு கிடைத்ததற்கு ஒரே காரணம், பிரதமர் நரேந்திர மோடி தான். எனவே, அவரது சர்வதேச ஆளுமை திறனை பறைசாற்ற வேண்டிய நேரம் இது.
இந்தியாவின் தலைமை பண்பு மற்றும் கலாசார பெருமைகளை உலக நாடுகள் அறிந்து கொள்ள வைப்பதோடு, அதன் மதிப்பு மரியாதையை, நாடு முழுதும் உள்ள குக்கிராமங்கள் வரை எடுத்துச் செல்ல வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும், பா.ஜ., மற்றும் பிரதமரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்திட வேண்டிய அவசியம் உள்ளது.
சர்வதேச அரங்கில், இந்தியாவின் தன்னிகரற்ற முக்கியத்துவத்தை முத்திரை பதிக்கப் போகும் இந்த ஜி - -20 மாநாட்டின் தாக்கம், 2024 பொதுத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
கடும் எதிர்ப்பு
இதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகள் இந்த மாநாட்டை விமர்சனம் செய்கின்றன.
இந்த மாநாட்டுக்கான, 'லோகோ'வில், பா.ஜ.,வின் தாமரைச் சின்னம் இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றன.இதற்கு பதிலடி தரும் பொறுப்பு பா.ஜ.,வுக்கு உள்ளது. இதை, மேல் மட்ட நிர்வாகிகளில் துவங்கி, அடிமட்டத் தொண்டர் வரையில் விளக்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், தேசிய அளவிலான நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள், இணைப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், அமைப்புச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
ஜி- - 20 மாநாடு குறித்து, நாளை மறுதினம் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அடுத்த நாளான, 6ம் தேதி மாலை நடக்கும் பா.ஜ., உயர்மட்ட குழுஆலோசனைக் கூட்டத்தின் இறுதி நிகழ்விலும் பிரதமர் பங்கேற்க உள்ளார். அப்போது, முக்கியமான மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஜி - -20 மாநாடு குறித்து ஆலோசிப்பார் என்றும், முக்கியமான யோசனைகளை பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுவதால், இந்த உயர்மட்ட குழு கூட்டம் குறித்து, பா.ஜ., வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:ஜி - 20 அமைப்புக்கு தலைமை வகிப்பது சுழற்சி முறையில் வழங்கப்படும் வாய்ப்பு. இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது தவிர்க்க முடியாதது. இதற்கு முன், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, தென் கொரியா உட்பட பல்வேறு நாடுகளும் இந்த அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளன. ஆனால், எந்த நாடும் நரேந்திர மோடி அளவுக்கு இந்த வாய்ப்பை வைத்து மிகப் பெரிய அரசியல் நாடகமாடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், உத்தர பிரதேச மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் ஸ்வதேந்தர சிங் தேவ் மற்றும் சுனில் ஜாக்கர் ஆகியோர், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசிலிருந்து பா.ஜ.,வுக்கு வந்த ஜய்வீர் சிங், செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நமது டில்லி நிருபர் -