உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
பழ.சுந்தரமூர்த்தி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின், பெயருடன் ஜாதி பெயர்களை பயன்படுத்த தடை விதித்தார். இந்த தடையை, அனைவருக்கும் ஒரே மாதிரியாக பயன்படுத்தினால், அவரின் எண்ணத்தை மெச்சலாம். ஆனால், ஆளுக்கும், ஜாதிக்கும் தகுந்தார் போல பயன்படுத்துவது தான் தவறானது. அந்தத் தவறையே 'திராவிட மாடல்' ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர்.
கோவைக்கான தி.மு.க., பொறுப்பாளராக, பையா கவுண்டர் என்பவரை நியமித்தார்; அவரின் இயற்பெயர் கிருஷ்ணன். ஆனால், அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டிகளில், அவரின் பெயரை, 'பையா' என்று பயன்படுத்துகின்றனர். இது, மரியாதை குறைவாக இருப்பதாக, ஒரு தரப்பினர் நினைக்கின்றனர்.

அதேபோல, தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் என்ற பெயரை, உ.வே.சாமிநாதன் என்று மாற்றினர். இவர், தமிழுக்கு ஆற்றிய தொண்டை தமிழ் கூறும் நல் உலகம் நன்கறியும்.
எண்ணற்ற ஏட்டுச் சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து, அதைப் பாதுகாத்து, பதிப்பித்து அழியாவண்ணம் காப்பாற்றிய பெருமை இவரையே சேரும். அதேபோல, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையை, வ.உ.சிதம்பரனார் என்று குறிப்பிடுகின்றனர்.
இதே நடைமுறையை, 'பசும்பொன் முத்துராமலிங்க தேவர்' குருபூஜை நிகழ்விலும் பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், தமிழக அரசின் இலச்சினையுடன் வெளியிடப்பட்ட குருபூஜை விளம்பரத்தில், 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், 115வது குருபூஜை விழா' என்றே குறிப்பிட்டிருந்தனர்.
எல்லா ஜாதியினரையும் சமமாக மதிக்கும் நேர்மையான அரசு என்றால், என்ன செய்திருக்க வேண்டும்... பசும்பொன் முத்துராமலிங்கம் என்றல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும்? தேவர் என்ற பெயரை குறிப்பிடாமல் விட்டால், அந்த சமூகத்தினரின் ஓட்டு வங்கியை இழந்து விடுவோம் என்ற பயமே இதற்கு காரணம்.
மேலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்யும் போதும், கட்சிக்கான மாவட்ட செயலர்களை நியமிக்கும் போதும், ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியினர் அதிகம் வசிக்கின்றனரோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவரையே தேர்வு செய்கின்றனர்.
கருணாநிதியின் துணைவியாரை இன்றளவும் ராஜாத்தி என்று தானே அழைக்கின்றனர். ராசாத்தி என்றல்லவா மாற்றியிருக்க வேண்டும்? இதே நடைமுறையை பின்பற்றி, 'ஸ்டாலின்' என்பதை, 'சுடாலின்' எனவும், அன்பில் மகேஷ் என்பதை, 'அன்பில் மகேசு' என்றும் மாற்றி இருக்கலாமே... இதுவரை அதை ஏன் செய்யவில்லை?
தங்களுக்கு ஒரு சட்டம், பிறருக்கு ஒரு சட்டம் என்ற ரீதியில், தி.மு.க.,வினரும், முதல்வரும் செயல்படுவது, எந்த விதத்தில் நியாயம்? மேலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற மமதையுடன் செயல்படுவதும் நல்லதல்ல... தி.மு.க., ஆட்சியாளர்களின் கபட நாடகத்திற்கு, விரைவில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பர்.