புதுடில்லி: காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த மல்லிகார்ஜுன கார்கேயை, மேலும் சில நாட்களுக்கு அந்த பதவியில் தொடர வைக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற சிந்தனையாளர் கூட்டம் கடந்த பிப்ரவரியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்தது.இதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கையை முன் வைத்தார்.
![]()
|
'கட்சியில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக எந்த பதவியும் கிடைக்காமல் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டம் செயல்படுத்தப்படும்' என அறிவித்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான தலைவர்கள் இதை ஏற்றனர்.
கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் என கூறப்பட்ட அசோக் கெலாட்டை, ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைப்பதற்காக, ராகுல் இந்த திட்டத்தை முன் மொழிந்தார்.
ஆனால், தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்த கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.
குளிர்கால கூட்டத் தொடர்
இதையடுத்து, காங்., தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டார். இதனால் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சோனியாவிடம் அளித்தார். இதன்பின் நடந்த தேர்தலில், காங்கிரஸ் தலைவராக கார்கே தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 7ல் துவங்கவுள்ளது. அதற்குள், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதிலாக புதிதாக ஒருவரை ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.
சிதம்பரம், திக்விஜய் சிங் போன்ற மூத்த தலைவர்களில் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், காங்கிரஸ் மேலிடத்திடம் வேறு ஒரு திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்., வட்டாரங்கள் கூறியதாவது:
குளிர்கால கூட்டத் தொடர் முடியும்வரை மல்லிகார்ஜுன கார்கேயை ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் தொடர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் கூட்டத் தொடர் குறித்து கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் ராஜ்யசபாவில் இருந்து வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், கார்கே ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள்
சிதம்பரம், திக்விஜய் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக வாய்ப்பில்லை என தெரிகிறது.
காங்கிரஸ் மேலிடத்தின் இந்த முடிவு, ஏற்கனவே ராகுல் அறிவித்த, 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற திட்டத்துக்கு முற்றிலும் முரணாக உள்ளது. ஆனாலும், கூட்டத் தொடர் முடிந்ததும் கட்சியின் ஒட்டுமொத்த பார்லிமென்ட் குழுவும் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.