கோவை :''அர்ச்சகர்களுக்கான பயிற்சியை ஐந்தாண்டிலிருந்து ஓராண்டாக குறைத்தது தமிழக அரசின் தவறான செயல். அதேபோல் அரசின் பதவிக்காலத்தை ஐந்தாண்டில் இருந்து ஓராண்டாக குறைக்க முடியுமா?' என, ஆன்மிகவாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் ஐந்தாண்டுகள் அர்ச்சகர் பயிற்சி என்பதை ஓராண்டாக தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால் பூஜைகளின் முக்கியத்துவம் குறையும். பக்தர்கள் வழிபாடு நடைமுறையிலும் சிக்கல்கள் ஏற்படும் என ஆன்மிகவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
![]()
|
விஜயகுமார், மாநில இணை பொதுச்செயலர், விஸ்வ ஹிந்து பரிஷத்: கோவில்களில் பாரம்பரியமாக ஆகம விதிப்படி பூஜைகள் செய்யும் முறைக்கான பயிற்சியில் திடீரென மாற்றம் கொண்டு வருவது சரியல்ல. கோவில்களின் பாரம்பரிய நடைமுறை பூஜைமுறை அழிவதோடு நம் தமிழ் பண்பாடும் சிதைந்து போகும். யாரை வேண்டுமானாலும் சுவாமிக்கு பூஜை செய்ய அமர்த்தி வழிபாட்டு முறையை சிதைத்து பாரம்பரியத்தை அழிக்கும் எண்ணத்தை செயல்படுத்த பார்க்கிறது தி.மு.க., அரசு. இதை அனைத்து ஆதீனங்களும், பண்பாட்டை காக்கும் ஹிந்து இயக்கங்களும் தடுத்து நிறுத்த வேண்டும்.
உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமி, அருள்ஜோதி தபோவனம், லட்சுமி நாயக்கன்பாளையம்: அர்ச்சகர்களுக்கான பயிற்சியை ஐந்தாண்டில் இருந்து ஓராண்டாக குறைத்தது தமிழக அரசின் தவறான செயல். தமிழ் வேதம் திருமுறைகள் சமய நெறிகளை எல்லாம் வலுப்படுத்த ஐந்து ஆண்டுகள் இருக்கும் நிலையே சிறந்தது.
அரசின் ஆட்சி முறை ஐந்தாண்டாக இருப்பதை ஓராண்டாக குறைத்தால் ஆட்சி முறை சிறப்பாக இருக்க முடியாது. ஆகவே அர்ச்சகர்களுக்கு ஐந்தாண்டு பயிற்சி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.ராஜதேவேந்திர சுவாமி, இந்திரேஸ்வர மடாலயம், கோவை: கோவில்களில் வேத ஆகமங்கள், யாகங்கள், சமய முறைகளுக்கான காரியங்களாற்றுதல், திருக்குட முழுக்கு உள்ளிட்ட செய்முறைகளை அறிந்து கொள்ள ஓராண்டு போதாது.தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெண்பாவை, பாசுரங்கள், பன்னிரு திருமுறைகள், நாயன்மார்கள் ஆழ்வார்கள் அருளியவற்றை பாராயணம் செய்து, பக்தர்களுக்கு தெய்வீகத்தை உணர வைப்பது அவசியம்; அதற்கு ஐந்தாண்டுகளே போதாது.
அப்படியிருக்கும் சூழலில் ஓராண்டாக குறைப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. மடாதிபதிகள் தமிழ் திருமுறையாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து முறையாக ஆலோசனைகளை கேட்டு, அதன் பின் தமிழக அரசு முடிவெடுப்பது அவசியம். ஹிந்து சமய சடங்குகளில் தமிழக அரசு தலையிடுவதும், தன்னிச்சையாக முடிவெடுப்பதும் தவறான நிலைப்பாடாகும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement