நரிக்குடி--டாக்டர் பற்றாக்குறை, இன்வெர்ட்டர் வசதியில்லை, இரவு நேர சிகிச்சை வேறு மருத்துவமைனக்கு செல்லவேண்டிய நிலை உள்பட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள்.
நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 150க்கு மேற்பட்ட கிராம மக்களின் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. விபத்து, காய்ச்சல், தலைவலி, பிரசவம் என அனைத்துக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முக்கிய பங்காற்றி வருகிறது.
தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள், வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். 2 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். மற்ற நேரங்களில் செவிலியர்கள் நோயாளிகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் டாக்டர்கள் இருப்பது கிடையாது.
விபத்து மற்றும் அவசர நோயாளிகளை திருச்சுழி, அருப்புக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். திருச்சுழி அருப்புக்கோட்டை தவிர்த்து மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பயணம் மேற்கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணம் அவசர நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.
இங்கு இருக்கக்கூடிய 108 ஆம்புலன்சில் அவ்வப்போது டிரைவர் பற்றாக்குறையால் அவசரத்திற்கு எடுத்துச் செல்வதில் பிரச்னைகள் ஏற்படுவதால், கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறைந்தபட்சம் மாதம் 10 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. வார்டுகளில் அடிப்படை வசதிகள் கிடையாது. பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. சமீபத்தில் திருடர்கள் உள்ளே புகுந்து தாய்மாரிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
இரவு வாட்ச்மேன் இல்லாததால் போதிய பாதுகாப்பு கிடையாது.
இரவு நேர டாக்டர் தேவை
சாத்தார், தனியார் ஊழியர்: திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நரிக்குடியை தவிர்த்து திருச்சுழி 30 கி.மீ., மானாமதுரை 35 கி.மீ., செல்ல வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் விபத்தில் பாதிக்கப்பட்டவர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நரிக்குடியில் முதலுதவி செய்து அனுப்பி வைக்கின்றனர்.
இரவு நேரங்களில் செவிலியர்கள், டாக்டர்கள் இருப்பது கிடையாது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர டாக்டர்கள் நியமிப்பதற்கு விதிமுறைகள் இல்லை, என்றாலும் கூட அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியான இங்கு இரவு நேர டாக்டர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்வெர்ட்டர் வசதியில்லை
மாரிஸ் கண்ணன், தனியார் ஊழியர்: தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வதால் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும். இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பேட்டரி வசதி செய்யப்பட்டிருந்தது. அதையும் திருடர்கள் திருடி சென்றதால், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் சில நேரங்களில் மின்சாரம் இன்றி பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். சுற்றுச் சுவர் கிடையாது.
ஊழியர்கள் குறைவாக இருப்பதால் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு: இப்பகுதி மக்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி கூடுதல் டாக்டர்: செவிலியர்கள், இரவு காவலர், தேவையான உபகரணங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பது இப்பகுதி மக்களுக்கு உரிய தீர்வாக அமையும்.