நெய்வேலி : சூரிய ஒளி மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் வாயு மின் நிலையங்களை அமைக்க, ஒடிசா மாநில அரசின் மின் தொகுப்பு நிறுவனத்துடன், என்.எல்.சி., இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.எல்.சி., இந்தியா நிறுவனம், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தன் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. பழுப்பு நிலக்கரி சுரங்கம், நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையங்கள், சூரிய ஒளி, காற்றாலை மின் திட்டங்கள் என, பல்வேறு வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.
![]()
|
தற்போது, புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறைக்கான இலக்கை எட்டுவதற்கு உதவும் வகையில், பல்வேறு பசுமை மின் சக்தி திட்டங்களை அமைப்பதற்கு என்.எல்.சி., நிறுவனம் முக்கியத்துவம் தந்து வருகிறது.
இந்நிலையில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம், ஒடிசா மாநில மின் தொகுப்பு நிறுவனத்துடன் இணைந்து, நிலத்தில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின் திட்டம், நீர் நிலைகளில் மிதக்கும் சூரிய ஒளி மின் திட்டம், புனல் மின் திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வரும், 'ஒடிசாவில் உற்பத்தி செய்வோம்' என்ற மாநாட்டில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராக்கேஷ் குமார் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சார்பில், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குனர் மோகன் ரெட்டியும், ஒடிசா மின் தொகுப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரிலோச்சன் பாண்டாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே, ஒடிசா மாநிலத்தின் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களில், ஆண்டிற்கு இரண்டு கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கத்தை என்.எல்.சி., நிறுவனம் செயல்படுத்தி வருவதுடன், மணிக்கு, 24 லட்சம் யூனிட் மின் சக்தி உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தையும் விரைவில் அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.