மதுரை : மக்களிடம் சரியான மாற்றம் ஏற்படுத்த நல்ல ஊடகங்கள் தேவை. காவிரி உட்பட எல்லா பிரச்னைக்கும் ஒருமைப்பட்ட இந்தியாதான் தேவை,'' என மதுரையில் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க 3வது மாநில மாநாட்டில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
மாநாட்டில் காலையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது:
தமிழகத்தில் பிரிவினை வாதத்திற்கு எதிரான எண்ணமே வரக்கூடாது என்று கருதுகின்றனர். பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி என்று கூறினால் அதை மறுத்துப்பேச டி.ஜி.பி., வருகிறார். திருமாவளவன் இங்கு தனித்தமிழ்நாடு வேண்டும் என்று பேசலாம். அவரை போலீசார் கைது செய்யவில்லை. அவர் சுதந்திரமாக திரிகிறார்.
கவர்னர் டில்லி போனால் கவர்னர் ஓட்டம்' என்று செய்தி போடுகின்றனர். அதுகுறித்து நான் பேசினால் எச்.ராஜா மிரட்டுகிறார் என்கின்றனர். பரபரப்பாக எழுத வேண்டுமென்றால் கவர்னர் பறந்து சென்றார் என்றுகூட எழுதலாமே. கவர்னர் டில்லிக்கு பிரிவினைவாதம் பற்றி பேசுவோர் குறித்து பேச போயிருக்கலாம். இதற்கு நடவடிக்கை எடுக்காத போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க போயிருக்கலாம். மாநிலத்தில் அரசு என்று ஒன்று உள்ளதா இல்லையா எனத்தெரியவில்லை.
இன்றைய ஆட்சியாளர்கள் கருத்து திருடர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் சொன்னதை அண்ணாத்துரை சொன்னதாக கூறுவர்.
மக்களிடம் சரியான மாற்றம் ஏற்படுத்த நல்ல ஊடகங்கள் தேவை. காவிரி உட்பட எல்லா பிரச்னைக்கும் ஒருமைப்பட்ட இந்தியாதான் தேவை. காசியில் காரைக்குடி தமிழர்களுக்கு 70 ஆண்டுகளாக முதல் மரியாதை உள்ளது. அங்கு எந்த அமைப்பும் எதிர்க்கவில்லை. காசி பனாரஸ் பல்கலையில் தமிழ் இருக்கை உள்ளது. அதுபோல இங்கு பல்கலையில் கவி காளிதாசுக்கு இருக்கை அமைத்து சமஸ்கிருதம் கற்பித்தால் இங்குள்ளவர்கள் அனுமதிப்பார்களா ? அந்தளவு மொழி வெறுப்பை திராவிட மாடல் ஆட்சி உருவாக்கி உள்ளது. இதை மாற்ற வேண்டும். இதற்கு நாம் எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். அரசு இயந்திரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே உண்மையை ஊடகங்கள் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய சிந்தனை

தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: 1970ல் தினமலர் திருநெல்வேலி பதிப்பில் இளைஞர்கள் பலர் பணியில் சேர்ந்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இரவில் வாக்குவாதம் செய்து கொண்டனர். அதாவது விண்ணில் ஏவிய ராக்கெட் மதுரை, தென்காசி, தஞ்சையில் விழ வேண்டும் என ஒவ்வொருவரும் கூறியதால் இப்பிரச்னை உருவானது. காரணம் ஒவ்வொருவருக்கும் சொந்த ஊர், உறவினர் வசிக்கும் ஊர் என காரணங்கள் இருந்தது. அப்போது யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதை தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., அவர்களிடம் எடுத்துக் கூறினார். இதுதான் தேசியம், மானுடம் ஆகும்.
நேர்மையுடன் செய்தி
ஒரு நிருபர் அரசு பொதுத் தேர்வில் 50 சதவீதம் பேர் தோல்வி என தலைப்பு எழுதினார். அப்போதும் நிறுவனர் அவரை அழைத்து, செய்தி 50 சதவீதம் வெற்றி என நேர்மறையாக இருக்க வேண்டும் எனக் கூறினார். தோல்வி என எழுதியதால் அதற்கு காரணமான அதிகாரியை அரசு சஸ்பெண்ட் செய்தது. எனவே எந்த ஒரு செய்தியையும் நேர்மையுடன் பல கோணத்தில் பார்த்து எழுத வேண்டும் என்றார் நிறுவனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்ட போது தமிழகம் உட்பட பல பகுதியிலும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒரு சிலரின் தவறால் மொத்த சமுதாயத்தையே தவறாக கூறக் கூடாது என்பதால் நாங்கள் எந்த இடத்திலும் ஜாதி பிரச்னையை எழுதுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஜாதி, மதம் அடையாளம் இருக்கும். அதனை செய்தியில் விதைத்தால் பல பிரச்னைகளை உருவாக்கும். பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்கள் என்ற கருத்தை எனது தாத்தா ஆர்.கிருஷ்ணமூர்த்தி நாணயவியல் ஆராய்ச்சி செய்து மாற்றினார். அவர்கள் நாணயங்களை பயன்படுத்தி, ரோம் உட்பட பல நாடுகளுடன் வணிகம் செய்தவர்கள் என்பதை நிரூபித்தார்.
32 மொழிகளை அறிந்த பாரதி யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் எங்கும் காணோம் என்றார். தமிழ், தமிழர் மட்டுமே பெரிது என்று கூறும்போதுதான் பிரச்னை வருகிறது. அதை சரியாக புரிந்து கொண்டால் தேசியத்துடன் கலந்து விடலாம். அந்த சிந்தனை உருவாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை ஆதினம், சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா, பா.ஜ.,பொதுச் செயலாளர் சீனிவாசன், மாநில பேச்சாளர் கல்யாணராமன், நேஷனலிஸ்ட் போஸ்ட் நிறுவனர் தியாகராஜன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமாஆனந்த், கிடுகு திரைப்பட இயக்குனர் வீரமுருகன், சென்னை பிரஸ்கிளப் பொதுச் செயலாளர் விமலேஸ்வரன், சங்க மண்டல தலைவர் வெங்கடேஷ், பத்திரிகையாளர்கள் மருது அழகுராஜ், மணி உட்பட பலர் பங்கேற்றனர். மண்டல செயலாளர் கார்த்திக்குமார் நன்றி கூறினார்.
Advertisement