திண்டுக்கல்,-திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதி ரோட்டோர கடைகளில் சுகாதார மில்லாமல் திறந்த வெளியில் உணவு பொருட்களை விற்பதால் பலரும் வயிற்றுப்போக்கு,வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் டீ கடை, ஓட்டல்கள், மிட்டாய் கடை உள்ளிட்ட கடைகளில் விற்கப்படும் சம்சா, பஜ்ஜி, முறுக்கு, வடை போன்ற உணவு பொருட்களை சுகாதாமில்லாமல் திறந்த வெளியில் வைத்து விற்கின்றனர்.
இதில் ஈ,கொசு,வண்டுகள் உட்கார அதை அறியாமல் வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு அஜீரணம், வயிற்றுப்போக்கு, வாந்தி பிரச்னைகள் ஏற்படுகிறது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
அது மட்டுமில்லாமல் இக்கடைகள் ரோட்டோரங்களில் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களிலிருந்து வெளிவரும் கரும்புகைகள், ரோட்டோர துாசிகள் திறந்த வெளி உணவு பொருட்களில் படிகிறது.வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களும் பெரும் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிவராமபாண்டியன், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர், திண்டுக்கல்: ஆய்வுகள் நடத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.