வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டாம்' என அச்சு ஊடகங்களை, பி.சி.ஐ., எனப்படும் இந்திய பத்திரிகையாளர் சங்கம் அறிவுறுத்திஉள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் நவ., 12ல் நடந்தது. குஜராத் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினமும், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாளும் நடக்க உள்ளன.
இந்நிலையில், இந்திய பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில், கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டியுள்ளதால், கருத்துக் கணிப்புகள் மற்றும் முடிவுகளை குறிப்பிடும் கட்டுரைகளை வெளியிட வேண்டாம் என அச்சு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கணிப்புகள் வாக்காளர்களின் மன நிலையை மாற்றும் என்பதால், இவற்றை வரும் ௫ம் தேதி மாலை 5:30 வரை வெளியிட வேண்டாம். இதை மீறி கருத்துக் கணிப்பை வெளியிடுவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக அமையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.