பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அனுமதி வழங்குமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, மத்திய அரசிடம் அனுமதி கோருவது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

* சரியா சொன்னீங்க... இப்படி தான் அரசு அலட்சியமா இருந்த நேரத்துல, மார்க்கண்டேய நதிக்கு குறுக்கே யார்கோள் அணையை கர்நாடக கட்டியது... அப்படி எதுவும் ஆகிவிடக் கூடாது!
கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பி.கிருஷ்ணசாமி பேட்டி:
கொரோனா காலத்தில், முன்களப் பணியாளர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை வழங்காமல், மாநில அரசு எங்களை ஏமாற்றுகிறது. ஊக்கத்தொகையை இனியும் வழங்க தாமதித்தால், வரும் நாட்களில் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட மற்ற துறைகளில் பணி செய்வதை மறுபரிசீலனை செய்ய உள்ளோம்.
* கொரோனா நேரத்துல, கிருமி நாசினின்னு பச்ச தண்ணிய தெளிச்சவங்களுக்கு, அரசு பைசா பாக்கி இல்லாம செட்டில் செஞ்சிட்டு, அப்பாவி ஊழியர்களை அலைக்கழிப்பது நியாயமா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
சென்னை, மணலியை சேர்ந்த பார்த்திபன் என்ற ஆட்டோ டிரைவர், 'ஆன் லைன்' சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தடை நீக்கப்பட்ட பிறகு நடக்கும், 34-வது தற்கொலை இது. ஆன் லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், இத்தகைய நிகழ்வுகள் தினசரி நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும், தடுக்க முடியாததாகி விடும்.

* 'ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் வந்துவிடக் கூடாது' என, தமிழக அரசில் 'ஸ்லீப்பர் செல்'லாக இருந்து யாரும் பணிபுரிகின்றனரா என தோணுது!
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தணிக்கையாளர் கி. பாலமுருகன் பேட்டி:
பள்ளிக்கல்வி துறை அலுவலகங்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 10 ஆயிரம் அமைச்சு பணியாளர்கள் பணிபுரிகின்றனர்; இவர்களுக்கு இரு மாத சம்பளம் வழங்கவில்லை. பள்ளிக்கல்வி ஆணையர், நிதித்துறையில் முறையான அனுமதி பெறாமல், பணி மாறுதல் கலந்தாய்வு செய்தது தான் இதற்கு காரணம்.
* ஒரு காலத்துல தி.மு.க., ஆட்சின்னா அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அல்வா மாதிரி இனித்தது... இப்ப, அவங்களையும் வெறுப்படைய வச்சுட்டாங்களே!
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
சட்டசபை, நீதி, நிர்வாகம் மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு துாண்கள், மக்களாட்சி எனும் மணிமண்டபத்தை தாங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த துாண்கள் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

* எல்லா துாண்களும் பலமாகவே இருக்கின்றன... ஆனா, உங்க கட்சியின் அஸ்திவாரம் தான் ஆட்டம் கண்டுட்டு இருக்கு; அதை முதலில் கவனியுங்க!