வாஷிங்டன்: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இவர் விருது வழங்கிய இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு கடந்த ஜன. 25ம் தேதி அறிவித்து இருந்தது. சுந்தர் பிச்சை (கூகுள் நிறுவனம்), சத்ய நாதெல்லா, காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
‛‛ பத்ம பூஷண் விருது பெற்றார் சுந்தர் பிச்சை''
இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.
சுந்தர் பிச்சை:
* சுந்தர் பிச்சை தமிழத்தில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார்.

* பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
* சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இந்திய மக்களுக்கு நன்றி:
இது குறித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன். நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது.

இந்த உயரிய விருது அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி. எனக்கு பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக உள்ளது. என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி.
கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவை தொடர்ந்து வளர்க்க நான் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உந்து சக்தியாகும். எனவே, வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.