கோல்கட்டா: மே.வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் குண்டுவெடித்ததில் 2 பேர் பலியானார்கள். அக்கட்சி தலைவர் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜியின் பேரணி நடக்க இடத்தில் இருந்து சற்று தொலைவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பகபுன்பூரின் நர்யபிலா கிராமத்தில் நேற்று(டிச.,2) இரவு 11:15 மணியளவில் திரிணமுல் காங்கிரஸ் பூத் தலைவர் வீட்டில் குண்டு வெடித்தது. அதில் வீடு பலத்த சேதமடைந்தது. எந்த வகையான குண்டு வெடித்தது என தெரியவில்லை எனக்கூறியுள்ள போலீசார், இதனால் ஏற்பட்ட பாதிப்பு பெரிது எனவும், மண்ணால் ஆன அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பா.ஜ., தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ''வெடித்தது நாட்டு வெடிகுண்டு. மாநிலத்தில் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது'', என குற்றஞ்சாட்டினார்.
கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சுஜன் சக்கரவர்த்தி,'' இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மவுனம் காப்பது ஏன்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் பொது செயலாளர் குணால் கோஷ் கூறும் போது, ''ஆதாரம் இல்லாமல் ஆளுங்கட்சியை குற்றம்சாட்டும் பணியை எதிர்க்கட்சிகள் எளிதாக செய்கின்றன,'' எனக்கூறினார்.
மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அமைதியான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில், நாட்டு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் தொடர்ச்சியாக சிக்கி வருகின்றது.
கடந்த 2018 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை பின்னுக்கு தள்ளி பா.ஜ., இரண்டாவது இடத்தை பிடித்தது.