சென்னை: மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். தனி கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியவதாவது: அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது.
ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது. பிறவியில் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - பின்னர் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் - விபத்தின் காரணமாக ஏற்பட்ட நிலையில் இருந்தாலும் - பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களை சிறப்புக் கவனம் செலுத்திக் கவனிக்க வேண்டும்.

அவர்களது உடல் குறைபாடானது, ஆனால் உள்ளக் குறைபாடு அல்ல, அறிவுக்குறைபாடு அல்ல, திறன் குறைபாடு அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களை நாம் மதித்தாக வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவித்தொகை ரூ. 1,000ல் இருந்து ரூ. 1,500 ஆக ஜனவரி 1 முதல் உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளை அனைவரும் மதிக்க வேண்டும். தனி கவனம் செலுத்த வேண்டும். மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக உருவாக்கிய அந்த பாதை அன்பு பாதை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவுக்கான வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஊதா அங்காடி மற்றும் நவீன உதவி உபகரணங்களுக்கான கண்காட்சியினை முதல்வர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.