வாஷிங்டன்: இந்தியாவுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீனாவிற்கு உரிமையில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உத்தரகண்டில், சீனா எல்லையில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள 'ஆழி' என்ற இடத்தில் இந்தியா - அமெரிக்க ராணுவம் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இரு நாட்டு ராணுவமும் இணைந்து மேற்கொள்ளும் 18 வது பயிற்சி இதுவாகும். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இரு நாடுகள் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயல் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: யாருடன் ராணுவ பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் முடிவாகும். இதில் 3வது நாடு தலையீட்டை அனுமதிக்க முடியாது. சீனாவுடனான 1993 மற்றும் 1996 ஒப்பந்தத்தை எந்த வகையிலும் இந்த கூட்டு ராணுவ பயிற்சி மீறவில்லை. இந்த குற்றச்சாட்டை கூறும் சீனா தான், இந்த ஒப்பந்தத்தை மீறுகிறது என்பதை அந்நாடு சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி எலிசபெத் ஜோன்ஸ் கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதியாக துணை நிற்கும். இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு சீனாவிற்கு உரிமையில்லை. அதன் வேலையும் இதுவல்ல. இதனை இந்திய தரப்பு கூறியுள்ளது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் 157 பில்லியன் டாலர் ஆக அதிகரித்துள்ள சூழ்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் தற்போது தேவையில்லை என நம்புகிறேன். இந்த தருணத்தில் அது குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.