வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லியில் நடந்த மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டிஜிட்டல் ஆதாரங்களை, டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அழித்துள்ளார். 15 மொபைல்போன்களை அவர் மாற்றியுள்ளார் என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: மணிஷ் சிசோடியா ஏராளமான டிஜிட்டல் ஆதாரங்களை அழித்துள்ளார். டில்லி மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ள 36 பேர் 170 மொபைல்போன்களை அழித்துள்ளனர். மணிஷ் சிசோடியா ஒரே நாளில் 4 மொபைல்போன்களை மாற்றியுள்ளார்.

அவருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்ததும் 2 -3 மாதங்களில் 15 மொபைல்போன்களை மாற்றியுள்ளார். டிஜிட்டல் ஆதாரங்களை அழிப்பது தொடர்பாக கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் விஜய் நாயர், மதுபான வழக்கு குற்றவாளிகளான அமித் அரோரா மற்றும் சன்னி மர்வா ஆகியோருடன் மணிஷ் சிசோடியா ஆலோசனை நடத்தியுள்ளார்.

டில்லி மதுபான கொள்கையில் மணிஷ் சிசோடியாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த மோசடியில் அவர் முழுதாக ஈடுபட்டு உள்ளார். அமலாக்கத்துறையின் பிடியில் இருந்து தப்பவில்லை. அந்த அமைப்பின் வலையில் தொடர்ந்து உள்ளார். இவ்வாறு சம்பித் பத்ரா கூறியுள்ளார்.