புதுடில்லி,:விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த 'ஓயோ' நிறுவனம், கிட்டத்தட்ட 600 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹோட்டல் அறைகளை ஆன்லைனில் பதிவு செய்வதில் முன்னணி நிறுவனமான ஓயோ, ஆள்குறைப்பில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில், கிட்டத்தட்ட 3,700 பேர் பணிபுரிகிறார்கள். இந்நிலையில், இதில் 10 சதவீதம் அளவுக்கு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க எண்ணியிருப்பதாக தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக, தொழில்நுட்ப பிரிவில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும்; 250 பேரை புதிதாக பணிக்கு அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், அதன் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, இத்தகைய முயற்சிகளில் இறங்கி உள்ளது.
தங்களால் இயன்ற அளவு, ஊழியர்களுக்கு வெளியே வேலை கிடைப்பதில் உதவுவதாகவும், சராசரியாக, மூன்று மாதங்கள் வரை, அவர்களின் மருத்துவக் காப்பீட்டைத் தொடருவதாகவும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.