சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சட்டங்கள் சந்திக்கும் சங்கடங்கள்!

Updated : டிச 04, 2022 | Added : டிச 03, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
எஸ்.துரைசாமி, துாத்துக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டம் அனைவருக்கும் பொதுவானது; ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காதது' என, சும்மா வாய் வார்த்தையாகவே சொல்லிக் கொண்டிருக்கிறோமே அன்றி, நம் நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் அனைத்தும், சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் பாதகமாகவும், பொருளாதார குற்றவாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சாதகமாகவே
இது உங்கள் இடம்



எஸ்.துரைசாமி, துாத்துக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டம் அனைவருக்கும் பொதுவானது; ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காதது' என, சும்மா வாய் வார்த்தையாகவே சொல்லிக் கொண்டிருக்கிறோமே அன்றி, நம் நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் அனைத்தும், சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் பாதகமாகவும், பொருளாதார குற்றவாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சாதகமாகவே உள்ளன.

காவல் துறையினரை கைக்குள் போட்டபடி, குற்றச் சம்பவங்களில், சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர் என்றால், அரசியல்வாதிகள் மற்றும் ஆளுங்கட்சினர் ஆதரவுடன், நாட்டை சூறையாடும் வேலைகளில் ஈடுபடுகின்றனர், பொருளாதார குற்றவாளிகள்.


பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த பின், வெளிநாட்டுக்கு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடி, 'காங்கிரஸ் கட்சிக்கு உரிய பங்கை கொடுத்த பிறகே, நாட்டை விட்டு வெளியேறினேன்' என்று, கோர்ட்டிலேயே பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார் என்றால், எந்த அளவுக்கு குற்றவாளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த மோசடி நபர்கள் வரிசையில், தற்போது இணைந்திருப்பவர், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா.


புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி உள்ளது. இந்த அரவிந்த் கெஜ்ரிவால், சில ஆண்டுகளுக்கு முன், ஊழல் எதிர்ப்புக்கான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அதில் பங்கேற்றவர்; ஊழலுக்கு எதிரானவர் போல,மக்களுக்கு வேடிக்கை காட்டி, ஆட்சியை பிடித்தவர். இவரது ஆட்சியில் தான், மதுபான கொள்கையில் குளறுபடி செய்யப்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி வழக்கில், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர் கைது செய்யப்படலாம் என்றும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால், அந்தக் கவிதாவோ, 'நானும், எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரும், மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளோம். மிஞ்சிப் போனால், எங்களை சிறையில் தான் அடைக்க முடியும்; துாக்கில் போட முடியுமா... இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்' என்று திமிராக கூறியிருக்கிறார்.ஒரு அரசியல்வாதி மற்றும் மாநில முதல்வரின் மகள் என்பதால், இப்படி பேசியுள்ளார். அதேநேரத்தில், ஒரு சாமானியனாலோ, ஏழையாலோ இது போல பேசி விட முடியுமா? 'ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் உறவினர்களான நாங்கள், என்ன ஊழல் வேண்டுமானாலும் செய்வோம், அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படியே கேள்வி கேட்டாலும், வழக்கு போட்டாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டோம்' என்ற ரீதியில் தான், கவிதாவின் பேச்சு உள்ளது.இதை பார்க்கும் போது, நம் நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள், சமூக விரோத கும்பல்களாலும், பொருளாதார குற்றவாளிகளாலும், இன்னும் என்னென்ன விதமான சங்கடங்களை சந்திக்க நேரிடுமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.



செவிடன் காதில் ஊதிய சங்கு!


என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளாகியும், ஜாதிய கட்டுப்பாடு களை உடைக்க முடியவில்லை. ஜாதி ரீதியாகத் தான் இடுகாடு மற்றும் சுடுகாடுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. வாழ்க்கையின் கடைசி பயணத்திலாவது, சமத்துவம் ஆரம்பமாக வேண்டும்...

'இந்த, 21ம் நுாற்றாண்டிலும், உடலை புதைப்பதில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது சரியல்ல. இந்தச் சூழ்நிலை மாற வேண்டும். அனைத்து சமூகத்தினருக்குமான, பொது மயானத்தை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும், இறந்தவர்களின் உடலை எந்த பாகுபாடும் காட்டாமல் புதைக்கின்றனர். கிறிஸ்துவர்கள், இறந்தவரின் உடலை சர்ச்சுக்கு உள்ளே கொண்டு சென்று, பாதிரியார் முறைப்படி பிரார்த்தனை செய்த பின்னரே, அடக்கம் செய்கின்றனர்.

ஆனால், ஹிந்து கோவில்களுக்குள், இறந்தவரின் உடலை கொண்டு சென்று, அவரது ஆன்மா சாந்தி அடையும்படி பிரார்த்தனை செய்யும் வழக்கம் இல்லை; காரணம், அது தீட்டு என்று சொல்வர்.

ஹிந்து மதத்தில், இறந்தவர்களின் உடலை பெரும்பாலும் எரிக்கும் வழக்கமே உள்ளது. பட்டினத்தார் தன் தாய்க்கு மரக்கட்டைகளை அடுக்கி எரியூட்டாமல், வாழைமர பட்டைகளை அடுக்கி தீ

மூட்டினார் என்று, கேள்விபட்டிருக்கிறோம். 'ஆண்டியும், அரசனும், அறிஞனும், அசடனும் ஒரே இடத்தில் உறங்குவதால், சமரசம் உலாவும் இடமே மயானம் தான்' என, திரைப்படம் ஒன்றில், பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார்.

கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி கொள்கையைப் பின்பற்றும், திராவிட மாடல் ஆட்சி யாளர்கள், அனைத்து ஜாதியினருக்கும் பொதுவான இடமாக, மயானம் இருக்க சம்மதிக்க மாட்டார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி... இங்கே ஜாதிகள் அற்ற சமுதாயம் உருவாக வாய்ப்பே இல்லை. 'மனிதனின் கடைசி காலத்தில், மயானத்திலாவது சமத்துவம் பேணுங்கள்' என்ற நீதிபதிகளின் அறிவுரை, செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும் என்பதில், 'நோ டவுட்!'




நிரந்தர ஓய்வு கொடுத்து விடுவர்!



எம்.கலைவாணி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அநாகரிக பேச்சுக்கு பெயர் பெற்ற, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, மீண்டும் குதர்க்கமாக பேசி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். மாநிலத்தின் கவர்னரை அவன், இவன் என்று ஒருமையில் பேசி இழிவுபடுத்தி உள்ளதோடு, அவரையும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையையும், 'மென்டல்' என்றும், கொச்சையாக விமர்சித்திருக்கிறார்.

'எதிரி, உன்னை அதிகமாக விமர்சிக்கிறான் என்றால், அவனுக்கு உன் மீதான பயம் அதிகரித்து விட்டது என்றே அர்த்தம்' என, அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். அண்ணாமலையின் வளர்ச்சியால், தி.மு.க., ஆடிப்போயிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால், உருவான விரக்தியின் வெளிப்பாடே ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு.

'தி.மு.க., ஒரு மோசமான கட்சி; இந்தக் கட்சிக்கு எவனாவது துரோகம் செய்தால், கோர்ட்டுக்கு போக நேரிடும் அல்லது கை கால் இல்லாமல் போய் விடும்' என்றும் ஆர்.எஸ்.பாரதி கொக்கரித்திருக்கிறார். 'பொதுவாக, 70 வயதை தாண்டிய சிலருக்கு, மூளையில் ஏற்படும் தேய்மானம் காரணமாக, 'செனைல் டிமென்ஷியா' என்ற நோய் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் பேச்சிலும், செயலிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்' என்கின்றனர், மருத்துவர்கள். 70 வயதை தாண்டிய ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்களை கேட்கும் போது, மருத்துவர்கள் குறிப்பிடும் நோய் பாதிப்பு, இவருக்கும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, கட்சியின் நலன் கருதியும், மாநிலத்தின் நலன் கருதியும், நாகரிகம் தெரியாத ஆர்.எஸ்.பாரதியை, கட்சிப் பதவியிலிருந்து நீக்குவதோடு, அரசியலில் இருந்தும் அவருக்கு நிரந்தர ஓய்வளிக்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும். இல்லையேல், 1977 முதல் 1989 வரை தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த நேரத்தில், தி.மு.க.,வினர், 12 ஆண்டுகள் அஞ்ஞாதவாசம் அனுபவித்தது போன்ற நிலைமை, மீண்டும் உருவாகி விடும். அண்ணாதுரையின் கொள்கையான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றையும், மெரினா கடற்கரையில் அண்ணாதுரையின் உடலோடு சேர்த்து தி.மு.க.,வினர் புதைத்து விட்டனர் என்றே தோன்றுகிறது. ஆர்.எஸ்.பாரதி போன்றோரின் பேச்சுக்கள் தொடர்ந்தால், தி.மு.க.,வுக்கு மக்கள் நிரந்தர ஓய்வு கொடுத்து விடுவர்...

ஜாக்கிரதை!




சொந்தக் கட்சியினரை திருத்துங்கள் திருமா!


ஆர்.பி.கந்தசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சனாதனம் பற்றி வாய் கிழிய பொய் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு வெளுத்து வாங்கி விட்டார், அவர்கள் கட்சியின் பெண் நிர்வாகி.சென்னை தி.நகரில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணி விழா, மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்டது.இந்த விழாவில் பேசிய மகளிர் அணி நிர்வாகியான நற்சோனை, 'மகளிர் அணியில் உள்ள பெண்களை, நம் கட்சி நிர்வாகிகள் மிகவும் கேவலமாக திட்டுகின்றனர்; அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நம் கட்சியிலும், கீழ் மட்டம் முதல் மேல்மட்டம் வரை சனாதனம் இருக்கிறது; ஆண்கள் சமூகம் இன்னும் திருந்தவில்லை' என, திருமாவளவன் முன்னிலையிலேயே பொரிந்து தள்ளினார்.


அப்போது, மேடையின் முன் இருந்த பெண்கள் பலர், பலமாக கரவொலி எழுப்பினர். நற்சோனையின் பேச்சை, திருமாவளவனும் உற்று கவனித்தபடியே தான் இருந்தார். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த நிர்வாகி ஒருவர், மேடைக்கு ஓடோடி வந்து, 'மைக்கை ஆப்' செய்து விட்டார். நற்சோனை மேலும் எதுவும் பேசக்கூடாது என்றும் கூறினார். ஆனால், அவரோ சில நிமிடங்கள் பேசித் தான் முடித்தார். இதேபோன்ற ஒரு நிகழ்வு, அ.தி.மு.க.,விலோ அல்லது பா.ஜ., கட்சியிலோ நடந்திருந்தால், இந்நேரம் திருமாவளவனும், அவரை உலகப்புகழ் பெற்ற தலைவராக கருதும் ஜால்ரா கூட்டத்தினரும், வானத்துக்கும், பூமிக்குமாக எகிறி குதித்து ஏகடியம் பேசி இருப்பர். கம்யூனிஸ்ட்களும் ஓடோடி வந்து களத்தில் இறங்கி, வி.சி., கட்சியினருக்கு ஆதரவாக கோஷம் போட்டிருப்பர்.


ஆனால், சம்பவம் நடந்த இடம், வி.சி., கட்சியின் மகளிர் அணியினர் நடத்திய கூட்டமாயிற்றே, என்ன செய்வது... எதுவுமே நடக்காதது போல, கமுக்கமாக இருப்பதை தவிர, வாய்ச்சொல் வீரர்களுக்கு வேறு வழி தெரியவில்லை; மீறி பேசினால், கட்சியின் மானம் கப்பல் ஏறி விடுமே! சனாதனம் பற்றி இவர்கள் பேசுவது எல்லாம் ஊருக்கு செய்யும் உபதேசமே. சொந்த கட்சியினரை திருத்த முடியாதவர்களால், நாட்டை எப்படி திருத்த முடியும்!




கேரளாவிடம் பாடம் கற்க வேண்டும்!



வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -------கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞத்தில், அரசுமற்றும் தனியார் துறை பங்களிப்புடன், ௭,௫௦௦ கோடி ரூபாய் செலவில், துறைமுக கட்டுமான பணி நடந்து வருகிறது; இப்பணியை, அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது.

'இந்த துறைமுக கட்டுமானம், கடல் அரிப்புக்கு வழிவகுக்கும்; மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்; சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்' என்று கூறி, அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம், ௨௯ல் நடந்த நிபுணர் குழு கூட்டத்தில் பேசிய, கேரள அமைச்சர்கள், 'எக்காரணத்திற்காகவும் விழிஞ்ஞம் துறைமுகம் திட்டம் கைவிடப்படாது' என,திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். கேரள மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் அஹமத் தேவர்கோவில் பேசுகையில், 'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, முதுகெலும்பாகத் திகழப் போகும், விழிஞ்ஞம் துறைமுகம் திட்டத்தை எதிர்ப்பது, தேச விரோத நடவடிக்கை' என்றுஎச்சரித்துள்ளார். 'அடுத்த ஆண்டு செப்டம்பரில், முதல் கப்பல் இந்த துறைமுகத்திற்குள் நுழையும்' என்றும் அறிவித்துள்ளார். தனியார் மயத்தை எதிர்ப்பவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர். அவர்களின் ஆட்சியில், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் துறைமுக கட்டுமான பணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றால், அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை விட, மாநிலத்தின் நலனும், மக்களின் நலனுமே முக்கியம் என்று நினைக்கின்றனர். ஆனால், இதேபோன்ற ஒரு திட்டத்தை, தமிழகத்தில் மத்திய அரசு அமல்படுத்த முற்பட்டால், பா.ஜ., அரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டத்திற்கே மூடுவிழா கண்டு விடுவர். எனவே, இதுபோன்ற விஷயங்களில், கேரள மாநிலத்தை பார்த்து, தமிழக ஆட்சியாளர்கள் பாடம்

கற்றுக் கொள்ள வேண்டும்; தங்களின் அணுகுமுறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.




கவனிக்குமாகாவல் துறை?



பி.முனுசாமி, திண்டுக்கல்லில் இருந்து எழுதுகிறார்: 'மின் இணைப்பு கட்டணம், கடன் செயலி, 'சிம்' கார்டு துண்டிப்பு, வெளிநாடுகளுக்கு ஆயில் ஏற்றுமதி' என, இணையதளம் வாயிலாக நிகழ்த்தப்படும், ௩௦ வகையான, 'சைபர் கிரைம்' குற்றங்களை, போலீசார் வகைப்படுத்தி உள்ளனர். இந்த குற்றங்கள் பற்றி, 'முத்துவும் முப்பது திருடர்களும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும்வெளியிட்டுள்ளனர். 'இந்த புத்தகத்தை எல்லாருக்கும் கொடுக்க வேண்டும்' என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில், சைபர் கிரைம் தொடர்பாக, மாநிலம் முழுதும் உள்ள போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.இந்தச் செய்தியை படித்தவுடன், மறைந்த எம்.ஜி.ஆர்., நடித்து புகழ் பெற்ற, அலிபாபாவும், நாற்பது திருடர்களும் என்ற திரைப்படம் தான், நம் நினைவுக்கு வருகிறது. சைபர் கிரைம்களை தடுக்கும் விஷயத்தில், உயர் போலீஸ் அதிகாரிகள் காட்டி வரும், இந்த அக்கறை மிகவும் பாராட்டத்தக்கதே.டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளதை போல, 'முத்துவும், முப்பது திருடர்களும்' புத்தகத்தை, பொதுமக்களுக்கு அதிக அளவில் வினியோகிக்க அரசும், போலீஸ் துறையும் முன்வர வேண்டும்.மேலும், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக, விழிப்புணர்வு குறும்படங்களையும் தயாரித்து வெளியிட, போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, குற்றங்கள் பெரு

மளவு குறையும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

05-டிச-202214:50:43 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் வாசகர்களின் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X