புதுடில்லி :''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் இயற்றிய சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது போன்ற சம்பவம் உலகில் எங்கும் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை,'' என, நீதிபதிகள் நியமனம் தொடர்பான சட்டம் குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய, 'கொலீஜியம்' தேர்வு செய்கிறது.
இதை மாற்றும் வகையில், தேசிய நீதித்துறை நியமனக் கமிஷன் முறையை உருவாக்கும் வகையில் பார்லிமென்டில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இது செல்லாது என அறிவித்து, ௨௦௧௫ல் உச்ச நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பது தொடர்பாக, மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
![]()
|
இது தொடர்பாக, கடந்த சில மாதங்களில், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:நம்முடைய அரசியல் சாசனம், 'இந்தியர்களாகிய நாங்கள்...' என்ற வாசகத்துடனே துவங்குகிறது. பார்லிமென்ட் என்பது மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பாகும்.
மக்களின் விருப்பங்களை, தேவைகளை நிறைவேற்றும் வகையிலே
யே, பார்லிமென்டில் பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இதன்படி, தேசிய நீதித்துறை நியமன கமிஷன் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு, பார்லிமென்ட் வரலாற்றில் இல்லாத வகையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அனைவரும் ஒருமித்த ஆதரவு தெரிவித்திருந்தனர்.அதாவது, இந்தச் சட்டம், நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. ஆனால், இந்தச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.இதன்பிறகு, பார்லிமென்டில் இது தொடர்பாக யாரும் எதுவும் பேசவில்லை. இது மிகத் தீவிரமான பிரச்னை. பார்லிமென்ட் இயற்றிய சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது போன்ற சம்பவம் உலகின் எங்கும் நடந்ததாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.