குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் விரும்பி உண்ணும் பண்டங்களில், தேனும் ஒன்றாகும். பல வீடுகளில் சர்க்கரை, வெல்லத்துக்கு பதிலாக தேன் பயன்படுத்துவர்.
இனிப்பு என்றால் முதலில் நினைவுக்கு வருவது தேன். ஆனால் எளந்துாரின், பிளிகிரி ரங்கன மலையில் நாவல் பூக்களில் கிடைக்கும் தேன், கசப்பு தன்மை கொண்டதாகும்.
சாம்ராஜ்நகர், எளந்துாரின், பிளிகிரி ரங்கன மலையில், ஐந்து வகையான தேன் கிடைக்கின்றன. நாவல் பூக்களில் இருந்து கிடைக்கும் தேன், மிகவும் அபூர்வமானது. இனிப்பு குறைவாகவும், கசப்பு அதிகமாகவும் இருக்கும். அனைத்து நாட்களிலும் கிடைக்காது. சீசனில் மட்டுமே கிடைக்கும்.
இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால், மக்கள் அதிகம் வாங்குகின்றனர். குறிப்பாக நீரிழிவு உள்ளவர்கள், வாங்கி செல்கின்றனர்.
பிளிகிரி ரங்கனமலை, ஆயிரக்கணக்கான வகைகள் மரங்கள், செடி, கொடிகள் நிறைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த இடம். இத்தகைய இடத்தில் கிடைக்கும் கசப்பு தேனுக்கு, அதிக 'டிமாண்ட்' உள்ளது.
சோளகர் சமுதாயத்தினர், அடர்ந்த மலைப்பகுதிக்கு சென்று, நாவல் பூக்களில் தேனை சேகரித்து, எந்த ரசாயனமும் கலக்காமல், நகர்ப்பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்கின்றனர்.
சீசன் நேரத்தில் கடைகளிலும் கூட, இந்த தேன் கிடைக்கும். தற்போது நாவல் மரங்களில் பூக்கள் காய்க்கும் காலமாகும். எனவே தேன் உற்பத்தியாகிறது.
சுற்றுப்புற கிராமங்களின் இளைஞர்கள், சீசனுக்காகவே காத்திருக்கின்றனர். கூட்டம், கூட்டமாக மலைப்பகுதியில் சுற்றி அலைந்து, நாவல் பூக்களில் தேன் சேகரித்து, ஊருக்குள் கொண்டு சென்று விற்கின்றனர். வருவாயும் கிடைக்கிறது. கிராமங்களில் கிடைக்கும் தேன், தரமானது என்பதால் நகர்ப்புற மக்கள், கிராமங்களுக்கு சென்று தேன் வாங்குவதும் உண்டு.
ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேந்திரா கூறுகையில், ''நான் இதுவரை இனிப்பான தேன் மட்டுமே சுவைத்துள்ளேன். பிளிகிரி ரங்கன மலைக்கு வந்த போது, கசப்பு தன்மை கொண்ட, மருத்துவ குணங்கள் அடங்கிய தேன் கிடைப்பது தெரிந்தது. இதை வாங்கி சுவைத்தேன். புது அனுபவமாக இருந்தது,'' என்றார்.
- நமது நிருபர் -