சென்னை, டிச. 4-
முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்த உடன், எஸ்.எம்.எஸ்., வழியே பதிவு எண் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு மனு கொடுக்க, தமிழகம் முழுதும் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலிலே, மக்கள் நின்றபடி மனு கொடுக்கும் அளவுக்கு மட்டுமே இடம் இருந்தது.
தற்போது, அந்த அறை விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் உள்ளே சென்று மனு கொடுக்கலாம். இருக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு முன், முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தால், பதிவு எண் இல்லாத மனு ஏற்பு ரசீது வழங்கப்படும்.மனுவை கம்ப்யூட்டரில் பதிவு செய்து,மனுதாரருக்கு மனு பதிவு எண் எஸ்.எம்.எஸ்., அனுப்ப ஓரிரு நாட்கள் ஆகும்.
தற்போது மனு வாங்கிய ஒரு சில நிமிடங்களிலே, பதிவு எண்ணுடன், ஏற்பு சான்றிதழ், எஸ்.எம்.எஸ்., வழியாக மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.மனு மீதான நடவடிக்கையை, இணையதளம் வழியே, மனுதாரர் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.முதல்வர் தனிப்பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
நேரடியாக வழங்கும் மனுக்களுக்கு, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தபால் மற்றும் இணையதளம் வழியே வரும் மனுக்களை, துறை வாரியாக பிரித்து, அவர்களுக்கு மனு ஏற்பு சான்றிதழ் வழங்குவது தாமதமாகிறது. அதையும் விரைவுபடுத்த, நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.