தஞ்சாவூர்:தஞ்சாவூரில், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர், 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 35 வாகனங்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர், ரஹ்மான் நகரைச் சேர்ந்த கமாலுதீன் என்பவரின் 'ராஹத் டிராவல்ஸ்' நிறுவனத்தில் இயங்கும் பஸ்கள் மீது முதலீடு செய்தால் மாதந்தோறும் ஈவுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்; ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், கமாலுதீன் இறந்து விட்டார்; முதலீடு செய்தவர்களுக்கு ஈவுத்தொகை மற்றும் முதலீடு தொகை வழங்கப்படவில்லை.
இதனால், முதலீட்டாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார், திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த டிராவல்ஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, 6,380 பேர் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதும், கமாலுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்ட 154 வாகனங்களில், 35 வாகனங்கள் மட்டுமே இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் உள்ள 119 வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., லில்லி கிரேஸ் கூறியதாவது:
பலரின் முதலீடு பணத்தின் மூலம் கமாலுதீன், அவரது குடும்பத்தினர் ரேஹானாபேகம், அப்துல் கனி, அப்துல் ரஹ்மான் ஆகியோரது பெயர்களில், ஆம்னி, டவுன், புறநகர், மினி பஸ்கள், சொகுசு கார்கள், சுற்றுலா வாகனங்கள் என 154 வாகனங்கள் வாங்கியிருந்தனர்.
அதில், 35 வாகனங்கள் முதற்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களிலும், அந்த நிறுவன வாகனங்கள் இயங்குவது தெரிய வந்துஉள்ளது.
மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வாகனங்களையும் மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement