ஆத்துார்:சேலம் - உளுந்துார் பேட்டை இடையே புறவழிச்சாலைகளில் அடிக்கடி கோர விபத்துகள் ஏற்பட்ட நிலையில், ஆத்துார் புறவழிச்சாலை விரிவாக்க பணி துவங்கப்பட்டுள்ளது.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் - உளுந்துார்பேட்டை வரை, 136 கி.மீ., சாலை, 941 கோடி ரூபாயில், 'ரிலையன்ஸ் ஸ்டெக்சுரல் இன்ஜினியரிங்' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
மொத்த துாரத்தில், 97 கி.மீ.,க்கு மட்டும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.
இடையில் உள்ள, ஆத்துார் புறவழிச்சாலை, 7.2 கி.மீ., வாழப்பாடி, 4.62; உடையாப்பட்டி, 6.4; சின்னசேலம், 4.6; கள்ளக்குறிச்சி, 5.10; தியாக துருகம், 3.90; எலவனாசூர்கோட்டை, 4; உளுந்துார்பேட்டை, 2.57 கி.மீ., என, எட்டு புறவழிச்சாலைகளும், 38.99 கி.மீ.,க்கு, இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன.
நான்கு வழிச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள், புறவழிச்சாலையில் நுழையும்போது குழப்பம் ஏற்பட்டு, கோர விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது.
கடந்த, 11 ஆண்டில், 1,050க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புறவழிச்சாலைகள் அனைத்தையும், நான்கு வழிச்சாலையாக அமைக்க பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின; மத்திய அரசுக்கும் மனு அளித்தன.
இந்நிலையில், 2024 ஆகஸ்டுக்குள், எட்டு புறவழிச்சாலைகளும், நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை முடிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.
அதற்கு பின், 250 கோடி ரூபாயில் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக ஆத்துார் புறவழிச்சாலையில், மண் சமன்படுத்தும் பணி நடக்கிறது.
அத்துடன் நீர் வழித்தடத்தில் தண்ணீர் செல்ல சிமென்ட் குழாய், பாலம் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணி நடந்து வருகிறது.