வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வரும் 2024 ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்க வைப்பதற்கான ஆயத்தங்களை பா.ஜ., துவக்கி விட்டது. ஒவ்வொரு மாநில பா.ஜ., அரசும் தங்களுடைய மாநில அரசியலுக்கு ஏற்றவாறு பிரசார திட்டங்களை தயார் செய்து வருகின்றன.

இதற்கிடையே பிரதமர் மோடி தன் சக அமைச்சர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக, அவர் 'மத்திய அரசு என்னென்ன திட்டங்களை அமல்படுத்தி வருகிறது; இதனால் பயன் அடைந்தவர்கள் யார்' என்பதை பேசி வருகிறார்.
இதே போல 'அனைத்து மத்திய அமைச்சர்களும் தங்கள் அமைச்சகம் மக்களுக்கு என்ன சேவைகளை வழங்கியுள்ளது; இதனால் மக்களின் தரம் எப்படி உயர்ந்துள்ளது என்ற விபரங்களை கட்டுரையாக எழுதி பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும்' என மோடி கட்டளையிட்டுள்ளார்.

அடுத்த 12 மாதங்களில் இந்த விஷயம் செயல்படுத்தப்பட வேண்டும்; இது மத்திய அரசின் ஒரு ரிப்போர்ட்; இது மக்களை உடனடியாக சென்றடைய வேண்டும் எனவும் பிரதமர் சொல்லியிருக்கிறாராம்.
இதனால், ஒரு பக்கம் இந்த ரிப்போர்ட் வாயிலாக மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் வெளியாகும். இன்னொரு பக்கம், இந்த விளம்பரங்கள் வாயிலாக பத்திரிகைகளுக்கு அரசு தரப்பிலிருந்து வருமானம் கிடைக்கும்.