கோவை:மின் இணைப்புக்கு 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரரின் மொபைல் போன் எண்ணை மட்டும் பதிவு செய்ய, மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
கோவை மண்டல தலைமைப் பொறியாளர் டேவிட் ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொதுமக்கள் மின் இணைப்பு பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்போது, மின்வாரியம் வழங்கும் விண்ணப்பம்மற்றும் இதர தகவல்களை பெறுவதற்கு ஏதுவாக,விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் மொபைல்போன் எண்ணை மட்டும் பதிவு செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
ஆதார் இணைப்புக்கு ஒருமுறை கடவு எண்(ஓ.டி.பி.,) பெறப்படும் நிலையில், சுமார், 20 சதவீத மின் இணைப்புகளில், தொடர்பே இல்லாத தொலைபேசி எண்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அனைத்து மின் இணைப்புகளுக்கும்,மொபைல்போன் எண் இணைக்கப்பட்டபோது, 80 சதவீதம் மட்டுமே சரியான எண் இணைக்கப்பட்டுள்ளது.
வாடகைக்கு இருந்தவர்களின் எண்கள் கூட இணைக்கப்பட்டுள்ளன. ஓ.டி.பி., பெறும்போதுதான், அந்த மின் இணைப்புக்கும், மொபைல் போன் எண்ணுக்கும் தொடர்பு இல்லாதது தெரியவந்துள்ளது. இதையடுத்தே, நுகர்வோரின் சரியான எண்ணை இணைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, மின்வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.