பெருந்துறை:அரசுப்பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரத்தில், பெருந்துறை அருகே பெண் தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கீதாராணி, 53; துடுப்பதி பஞ்., பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை.
கடந்த நவ., 21ம் தேதி பள்ளி மாணவர் ஒருவருக்கு 'டெங்கு' காய்ச்சல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியை கீதாராணி, பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததால், கொசு கடித்ததாக அந்த மாணவர் கூறினார்.
இதுகுறித்து மாணவனின் தாய், கலெக்டரிடம் புகார் செய்தார். அவர் உத்தரவின்படி பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம், பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
இதில், ஆறு பட்டியலின மாணவர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியை உத்தரவிட்டது தெரிந்தது.
மேலும், விசாரணையின்போது கீதாராணி பணிக்கு வராததால், அவரை சஸ்பெண்ட் செய்து, தொடக்க கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதே சமயம் மாணவனின் தாய் புகாரின்படி, பெருந்துறை போலீசார் அந்த தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர். கீதாராணியை நேற்று கைது செய்த போலீசார், ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.