பல்லடம்:ஊராட்சி தலைவர்கள் பச்சை மையினால் கையொப்பம் இடுவது குறித்து, பல்லடம் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பல்லடம் சமூக ஆர்வலர் நாகூர் மீரான், பி.டி.ஓ.,விடம் அளித்துள்ள புகார் மனு:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள் உட்பட பலரும் பச்சை நிற மையினால் கையொப்பம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை தவிர்த்து வேறு யாரும் பச்சை மையால் கையொப்பம் இடக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், பெரும்பாலும் இதை யாரும் பின்பற்றுவதில்லை. சமீபத்தில், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி தலைவர் பச்சை மையால் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விதிமுறை மீறும் ஊராட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்வரும் நாட்களில் பச்சை நிற மையை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
'அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் பச்சை மையினால் கையொப்பம் இடக்கூடாது என கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக,' பி.டி.ஓ., பானுப்பிரியா பதில் கடிதம் அளித்துள்ளார்.