திருப்பூர் மாவட்டம், பெருந்தொழுவை அடுத்துள்ள, கண்டியன் கோவில், சம்மந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். ஆறு தலைமுறைகளாக இவரின் குடும்பம் மண்பானை, தீப விளக்கு தயாரிக்கும் பணியில், ஈடுபட்டு வருகிறது.
நம் ஊரில் மண் எடுத்து, நமது பாரம்பரியத்துடன் அகல்விளக்கு செய்து, ஆண்டவனுக்கு படைப்பதில் ஒரு நிம்மதி என்கிறார், ஜெகதீஷ். அவரிடம் பேசியபோது...
ஒரு ஆண்டில் ஆறு மாதம் வேலை, ஆறு மாதம் விற்பனை இப்படித்தான் இருக்கும். அகல்விளக்கு தயாரிப்பு பணியை, புரட்டாசி இறுதியில் துவங்கி விடுவோம். ஒரு கிலோ மண்ணில், 150 சிறிய விளக்குகள் செய்ய முடியும். விளக்கு தயாரிப்பதை விட, வெயிலில் காய வைத்து, பக்குவமாக, பாதுகாப்பது தான் சிரமம். சிறிய மழைத்துளி விழுந்து விட்டாலும், சேதம் அடைந்து விடும்.
மீண்டும் மண்பானையை பலரும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். மண் அடுப்பில், மண் சட்டி வைத்து சமைப்பவர் குறைவு என்பதால், காஸ் அடுப்பில் வைப்பதற்கு ஏற்ற, மண் பானைகளை தயாரிக்கிறோம். சாம்பார், புளி, வத்தல்குழம்பு, மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டு, மற்றவருக்கு விபரம் சொல்பவர்களும் உண்டு.
கோவில்களில் வேண்டுதல், வழிபாடுகளின்போது இதற்கு வரவேற்பு இருக்கும். தை மாதம் துவங்கினால் மாசி, பங்குனி, அப்புறம் வைகாசி, ஆடி மாதத்தில் கோவில் விசேஷங்களுக்கு ஆர்டர்கள் நிறைய வரும்.
இன்றும் கால்நடைகள் நலம் பெற, குழந்தைகள், பெரியவர் கை, கால், தலைவலி குணமாக மனித முக உருவம், குழந்தைகள் தவழ்வது போன்ற உருவம், மாடு, நாய் உருபொம்மைகளை வேண்டி, வாங்கி வைப்பவர் உண்டு. கருப்பராயன், கன்னிமார், அம்மன் மண் சிலை செய்து, விற்பனை செய்து வருகிறோம். வாங்கி வழிபாடு செய்பவர்களும் உள்ளனர்.
நம் ஊரில் மண் எடுத்து, பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் களிமண் விளக்குகள் தான் வழிபாட்டுக்கு உகந்தவை. கோவில் கரடிக்கம்பம் முதல் கருவறை வரை களிமண் விளக்குகள் அலங்கரிக்கிறது. மெஷின்களில் செய்யப்படும் 'டிசைன் விளக்குகள்' பார்ப்பதற்கு பளிச்சென வாடிக்கையாளர் வரவேற்பை பெறுவதாக இருந்தாலும், பழமை என்னவோ மண் விளக்கு தான்.
முன்பு எல்லா ஊரில் களிமண் கிடைக்கும். தற்போது, மண்ணின் தரம் குறைந்து விட்டது. மூன்று மண் 'மிக்ஸிங்' செய்து தான் களிமண் உருவாக்க வேண்டியுள்ளது.
குளம், குட்டைகள் துார்வாரி, மழைநீர் நிரம்பினால், மண் எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பழமை உயிர்ப்புடன் இருக்கவே தொழில் செய்கிறோம். தமிழக அரசு காடுகளில் மண் எடுக்க ஒப்புதல் வழங்க வேண்டும்.