சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பருவ கால காய்ச்சல் பரவுகிறது. இன்ப்ளூயன்சா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த ஏ, பி, சி வைரஸ்கள், பாரா இன்ப்ளூயன்சா, ரெஸ்பிரேட்டரி சின்சிட்டியல் வைரஸ், ரைனோ வைரஸ், ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ், ஹியூமன் கொரோனா வைரஸ் ஆண்டுதோறும் இதே பருவ காலங்களில் வேகம் எடுப்பது வழக்கம்.
முந்தைய இரண்டு ஆண்டுகளில் கொரோனா நோய்க்கான பாதுகாப்பு நடவடிக்கையான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்து வந்ததால் இந்த வைரஸ் பரவாமல் இருந்தன. இந்த ஆண்டு வழக்கம் போல் அதற்கான சீசன் வந்ததும் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.
இந்த வைரஸ் பரவலால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஏற்படும். பெரும்பான்மை மக்களுக்கு எவ்வித தீவிர பிரச்னை ஏற்படுத்தாமல் சாதாரண சிகிச்சை பெறுதல் மற்றும் ஓய்வு மூலம் குணமாகி விடும். இத்தகைய சாதாரண வைரஸ்களுடன் கூடவே கொரோனா வைரஸ் மற்றும் H1N1 எனும் பன்றி காய்ச்சலை பரப்பும் இன்ப்ளூயன்சா ஏ வைரசும் சேர்ந்து பரவிடக்கூடும். பன்றிக்காய்ச்சல் வைரஸ் என்பது குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரழிவு உள்ளிட்ட இணைநோயாளிகள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைய செய்யும் சிகிச்சையில் இருப்போருக்கு தீவிர சுவாச பாதை தொற்று ஆக மாறும் வாய்ப்பு உள்ளது. மூச்சிரைப்பு, திணறல், அதீத காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே டாக்டரை சந்தித்து சிகிச்சையை துவக்க வேண்டும்.
'ஏடிஸ்' கொசுக்களால் பரவும் 'டெங்கு'
மழை காலங்களில் பரவும் மற்றுமொரு ஆபத்தான நோய் டெங்கு காய்ச்சல். நன்னீரில் முட்டையிட்டு வளரும் 'ஏடிஸ்' வகை கொசுக்களால் பரவும். இந்த கொசு பகலில் கடிக்கும் தன்மை கொண்டது. அதீத காய்ச்சல் , மூட்டுக்கு மூட்டு தீவிர வலி , கண்ணுக்குள் வலி, வயிற்று வலி , கருப்பாக மலம் வெளியேறுதல், சிறுநீர் வழக்கத்துக்கும் குறைவாக செல்லுதல், அதீத உடல் சோர்வு போன்றவை டெங்குவின் அறிகுறிகள்.
முதல் மூன்று நாட்கள் அதீத காய்ச்சல் அடித்து சட்டென்று உடல் குளிர்ந்தாலும், காய்ச்சல் விட்ட பின்பு கூட அதீத உடல் அசதியும் சிறுநீர் கழிப்பது குறைவாக இருந்தாலும் கட்டாயம் சுதாரிக்க வேண்டும். டெங்கு என்று அறியப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க அறிவுறுத்தப்பட்டால் மருத்துவமனையில் சேர வேண்டும்.
சீசன் காய்ச்சலை தடுத்த முககவசம்
பருவ கால நோய் பரவலை தடுக்க, மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன் சோப்பு போட்டு முறையாகக் கை கழுவ வேண்டும். சானிடைசர்களை அவ்வப்போது உபயோகிப்பது சிறந்தது. சளி, இருமல் இருப்பவர்கள் இருமும்போது கைக்குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது சிறப்பு. கடந்த இரண்டு ஆண்டாக சீசனல் காய்ச்சல் அதிகம் தாக்காமல் தடுத்தது முக்கவசம் தான். வைரஸ் பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பதை தவிர்ப்பது நல்லது. சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்து பராமரிக்கலாம்.
- -ஏ.பரூக் அப்துல்லா
பொது நல சிறப்புமருத்துவர் சிவகங்கை. 75388 80299