மதுரை : ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கோயில் 'டிபாசிட்' தொகையை பயன்படுத்துவதில் தனக்கான அதிகாரத்தை இணைகமிஷனர்களுக்கு தாரை வார்த்துள்ளார். இதனால் தேவையில்லாத திட்டங்களுக்குகூட 'டிபாசிட்' தொகையை பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
அறநிலையத்துறையின்கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கோயில்களின் உண்டியல், கடை, நிலம் உள்ளிட்ட வருவாயை கொண்டு ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலவிடப்படுகிறது. உபரியாக இருக்கும் நிதிக்கு வட்டி கிடைக்கும் வகையில் வங்கிகளில் அந்தந்த கோயில்கள் 'டிபாசிட்' செய்து வருகின்றன.
கோயில் சார்ந்த திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் பட்சத்தில் 'டிபாசிட்' தொகை, காலாவதியாகும் முன்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு கமிஷனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போது இந்த அதிகாரத்தை இணைகமிஷனர்களுக்கு கமிஷனர் குமரகுருபரன் வழங்கியுள்ளார். இனி அந்தந்த கோயில்களின் திட்டப்பணிகளுக்கு இணைகமிஷனரே முடிவு செய்து 'டிபாசிட்' தொகையை பயன்படுத்த முடியும்.
நிர்வாக ரீதியாக இது எளிய நடைமுறை என்றாலும், தேவையில்லாத திட்டங்களுக்குகூட நிதியை பயன்படுத்த வாய்ப்புள்ளது. உதாரணமாக, ராமேஸ்வரம் கோயில் நிதியில் இருந்து ரூ.30 லட்சத்திற்கு பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. தற்போது இந்த விடுதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பராமரிப்பில் உள்ளது. இடமும், கட்டடமும் கோயில் இடம். ஆனால் நிர்வகிப்பது சுற்றுலா துறை. லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கப்படுகிறது. வருவாயே இல்லை என சுற்றுலா துறை சொன்னாலும் கோயில் நிர்வாகம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோயில் நிதியில் கட்டப்பட்ட விடுதிகளின் நிலைமையும் இதே நிலையில் தான் உள்ளன. அப்போதைய கமிஷனர் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகள் இன்று கோயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாய் தராத நிலையில், இணை கமிஷனர்கள் நிதி 'பவரை' கையாண்டால் நிலைமை இன்னும் சிக்கலாகும்.
எனவே கோயில்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 'டிபாசிட்' தொகையை கையாளும் அதிகாரத்தை கமிஷனர் தன் வசமே வைத்திருந்தால் மட்டுமே தேவையில்லாத திட்டங்களுக்கு நிதி செலவிடுவது தவிர்க்கப்படும்.