சென்னை,தமிழகம் அருகே வங்கக் கடலில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது, அடுத்த 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, புயலாக மாறலாம் என்பதால், தமிழகம், புதுச்சேரியில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.
மிதமான மழை
இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும்.
பின், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 8ல் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் நிலவக் கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்யக் கூடும். அதேபோல் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
9 செ.மீ., மழை
நாளை மறு தினம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.வரும் 7ம் தேதி, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யலாம்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பகுதியில், 9 செ.மீ., மழை பதிவானது.
அதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 6; கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பதிவானது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
இன்று அந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.நாளை, அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், சூறாவளி மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Advertisement