மதுரை : மிக பிற்பட்டோர் பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள குறவர் வார்த்தையை நீக்கம் செய்ய கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை விளாங்குடி இரணியன் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள் குறவர் சமூகத்தினர். தற்போது சமதள பரப்பில் வசிக்கின்றனர். மலைக்குறவன், குறவன் உள்ளிட்ட பெயர்களும் உண்டு. மிக பிற்பட்டோர் பட்டியலில் (எம்.பி.சி.,) 1951ல் நரிக்குறவர்கள் என தவறுதலாக பெயர் சேர்க்கப்பட்டது. குறவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்களின் பழக்க வழக்கம், வாழ்க்கை முறை வேறுபட்டவை.
குருவிக்காரன் (நரிக்காரன்) சமூகத்தினர் மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்களின் வாழ்க்கை முறை வேறு. அவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர்களை எங்களின் குறவன் என்ற பின் ஒட்டு பெயருடன் நரிக்குறவன் என அழைப்பதால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசின் சலுகைகளை பெறுவதில் குழப்பம் ஏற்படுகிறது. குறவன் என்ற எங்களது பெயருடன் சேர்த்து அவர்களை அழைக்கக்கூடாது.
குருவி பிடிப்பவர்களை தமிழில் குருவிக்காரன் என அழைப்பது போல், நரி பிடிப்பவர்களை நரிக்காரன் என அழைத்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராதவிதமாக நரிக்குறவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே குறவன் என்ற பெயரில் ஒரு தனி சமூகம் உள்ள நிலையில், குருவிக்காரன் சமூகத்தை குறிக்கும் போது குறவன் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கக்கூடாது. இதை தமிழக அரசு சரியாக பரிசீலிக்கவில்லை. இதனால் தமிழ் வம்சாவளி குறவர் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.பி.சி.,பட்டியலில் நரிக்குறவர் பெயரில் உள்ள குறவர்/குறவன் என்ற வார்த்தையை நீக்கம் செய்யக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு இரணியன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலர், பழங்குடியினர் நலத்துறை செயலர், தமிழக பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் நலத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.