சென்னை:''தி.மு.க.,வில் உழைக்கிறவர்களுக்கு, 'சீட்' கிடைக்கவில்லை; உழைக்காதவர்கள் பதவியில் இருக்கும்போது, வேதனை இருக்கத்தான் செய்யும்,'' என, அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், முன்னாள் எம்.பி., ஜின்னா படம் திறப்பு விழாவில், அவர் பேசியதாவது: எமர்ஜென்சி காலத்தில் பதவியில் இருந்தவர்கள், கருணாநிதியை விட்டு ஓடிப் போய் விட்டனர். கருணாநிதி தனியாக இருந்த காலத்தில், நான் அவருடன் ஓராண்டு உடனிருந்தேன். நான், ஜின்னா போன்றவர்கள், எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தோம். தற்போது, வழக்கறிஞர்களில் பாதி பேருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற வேதனை இருக்கும்; அது நியாயம்தான்.
உழைக்கிறவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் இருக்கும்போது வேதனை இருக்கத்தான் செய்யும்.

காலதாமதமாக வாய்ப்பு
நானும், ஜின்னாவும் பெரிதும் பாதிக்கப்பட்டோம். நாங்கள் சேர்த்து விட்டவர்கள், அமைச்சராக, எம்.பி.,யாகி விட்டனர். எங்களுக்கு காலதாமதமாக வாய்ப்பு வந்தது. ஒரே கொடி, ஒரே தலைவர் எனப் பொறுமையாக இருந்தால், என்றாவது ஒரு நாள் பதவி வரும்.
எனக்கு, 69 வயதில் எம்.பி., பதவி கிடைத்தது. ஜின்னாவுக்கும் அந்த வயதில்தான் கிடைத்தது. கட்சியில் ஒதுக்குவர். அதை ஜீரணித்துக் கொள்ள வேண்டும். ஜின்னாவை போன்றவர்கள் நமக்கு பாடம்.
கட்சிக்கு துரோகம்
கட்சி என்று வந்து விட்டால், பதவி வருதோ, இல்லையோ, இறுதிநாள் வரை அந்த கட்சியில் இருப்பவன்தான் விசுவாசமான தொண்டன். அதைவிட பெருமை எதுவும் இல்லை. அதுபோல், எல்லாரும் இருக்க வேண்டும். எங்களோடு ஆரம்ப காலத்தில் இருந்தவர்களில் சிலர்தான் தற்போது உள்ளோம். மற்றவர்கள் வந்தனர்; சென்றனர். சிலர் போய்விட்டு வருவதை ஜீரணிக்க முடியாது. துரோகம் செய்து முதுகில் குத்திவிட்டு சென்றவர்கள், புதுசா வந்து கொஞ்சுவர். அதை, ஜின்னா ஏற்க மாட்டார்; நானும் ஏற்க மாட்டேன். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, வைகோ போன்றவர்கள் போனபோது, பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் ஒன்றாக கட்சியில் இருந்தோம். சோதனையான நேரத்தில் எல்லாம், ஜின்னா அறிவாலயம் வந்து நிற்பார். தலைவர் மனதில் இடம் பெற்றதால், எம்.பி., சீட் கொடுத்தார்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.