சென்னை:''மாற்றுத் திறனாளி மாத ஓய்வூதியம் ஜன. 1 முதல் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாற்றுத் திறனாளிகளின் உடல் குறைபாடானது; ஆனால் உள்ளக் குறைபாடு அல்ல; அறிவுக் குறைபாடு அல்ல; திறன் குறைபாடு அல்ல.
புதிய முயற்சி
இதை அனைவரும் உணர்ந்து அவர்களை நாம் மதித்தாக வேண்டும். தடைகளை வென்று சாதனை படைத்தவர்கள் பலர் நம் தமிழகத்தில் இருக்கின்றனர்.
முன்பெல்லாம் மாற்றுத் திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கக் கூடிய காலம் இருந்தது. இப்போது அதைத் தாண்டி பொது வெளியில் போராடி முன்னுக்கு வரத் துவங்கி விட்டனர்.
மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை. வீட்டில் இருந்தே பணி செய்யலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கப் போகிறோம்.
அதற்கு சான்றாகத் தான் 'நான் முதல்வன்' திட்டத்தில் 'லேப்டாப்' மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய புதிய முயற்சியும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
வருவாய் துறை வழியாக ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் நான்கு லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போதுள்ள மாத ஓய்வூதியம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ரூ.263.58 கோடி செலவு
இது 1500 ரூபாயாக ஜன. 1 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 263.58 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவை வழங்கிய தொழில் நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அமைச்சர்கள் பொன்முடி கீதா ஜீவன் சேகர்பாபு சுப்பிரமணியன் கணேசன் பங்கேற்றனர்.