அவிநாசி:அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர், அதிகாலை, 5:30 மணி முதல், 7:30 மணி வரை அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அங்குள்ள மைதானத்தில், இளைஞர்கள் சிலர் விளையாடவும் செய்கின்றனர். இப்பள்ளி வளாகம் பரந்து, விரிந்திருப்பதால், நடைபயிற்சி மேற்கொள்வதை பலரும் விரும்புகின்றனர். பல காலமாக இப்பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், சில சமூக விரோதிகளால் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, பள்ளி வளாகத்திற்குள் நடைபயிற்சி மேற்கொள்ள, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதனால், பல ஆண்டுகளாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், பழைய பஸ் ஸ்டாண்டு -- புதிய பஸ் ஸ்டாண்ட் இடைபட்ட சாலையோரம் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் கூறிய தாவது:
அவிநாசியில் விளையாட்டு பயிற்சி, நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கென பிரத்யேக மைதானம் உள்ளிட்ட பொது இடங்கள் இல்லை. பல ஆண்டாக, பள்ளி வளாகம் மற்றும் மைதானத்தில் தான், மக்கள், நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
நடைபயிற்சி மேற்கொள்ள, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதால், வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்; இது, பாதுகாப்பானதாக இல்லை.
எனவே, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இவ்விவகாரத்தில் தலையிட்டு, அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை, யாருக்கும் இடையூறில்லாத நேரத்தில், பள்ளி வளாகத்திற்குள் நடைபயிற்சி மேற்கொள்ள, விளையாட அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.