திருப்பூர்;பெருமாநல்லுாரில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அருகே திருப்பூர் ரோட்டில் பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லுாரில், நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த இடத்தை சுற்றியும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இச்சூழலில், முதல்வர் வருவதற்கு முன்னதாக திருப்பூர் ரோட்டில், பெருமாநல்லுார் ஊராட்சி அலுவலகம் முன் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் போலீசார் யாரும் இல்லாத காரணத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சென்ற போலீசார் மறியலை கலைத்து விசாரித்தனர். அதில், 'கன்னிமார் தோட்டத்தில் வழித்தடத்துக்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி, பலமுறை மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்பது தெரிந்தது. அதன்பின், மக்களை போலீசார் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
முதல்வர் பங்கேற்க இருந்த இடத்துக்கு அருகே நடந்த திடீர் சாலை மறியல் காரணமாக போலீசார், சில நிமிடங்கள் திக்குமுக்காடி போயினர்.