வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும். இதை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இதற்கான வேலைகள், புதுடில்லியில் நிதி அமைச்சகம் அமைந்துள்ள 'நார்த் ப்ளாக்' வளாகத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா, இதுவரை தாக்கல் செய்துள்ள நான்கு பட்ஜெட் உரைகளிலும் திருக்குறள் உட்பட பல தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இவற்றின் வாயிலாக, நிர்மலா தமிழ் இலக்கியத்தின் பெருமைகளை வட மாநில மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
இந்த முறையும் தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்ட நிதி அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்த நிதித்துறை செயலர் டி.வி. சோமநாதனும் பல தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் தமிழகத்திற்கென புதிய திட்டங்கள் இடம் பெறும் என, புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பல மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்த வண்ணமாக இருக்கின்றனர்.

வரும் 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்திலிருந்து பா.ஜ., சார்பாக குறைந்தபட்சம் ஐந்து எம்.பி.,க்களாவது கிடைக்க வேண்டும் என பா.ஜ., தலைமை விரும்புகிறது. இதனால், இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நான்கு அல்லது ஐந்து சிறப்புத் திட்டங்கள் இருக்கும் என்கின்றனர்.