வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: அனைத்து மாநில கவர்னர்களின் மாநாடு, ஜனாதிபதி தலைமையில், புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த மாநாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால், ஜனாதிபதி திரவுபதி முர்மு, கவர்னர்கள் மாநாட்டை மீண்டும் நடத்த விரும்புகிறார். இதற்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாடு, வரும் ஜனவரியில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முறை மாநாடு புதுடில்லியில் நடைபெறப்போவதில்லை. மாறாக உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற உள்ளதாம்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த மாநாட்டை தன் மாநிலத்தில் நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். இந்த மாநாடு நடக்கும் போது, அவர் அனைத்து கவர்னர்களையும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அழைத்து செல்ல விரும்புகிறார்.

தவிர, புனித நகரமான காசிக்கும், கவர்னர்கள் வர வேண்டும் என்பது யோகியின் ஆசை. இதனால், லக்னோவிற்கு வரும் கவர்னர்கள் அனைவரையும் அயோத்தி மற்றும் காசிக்கு அழைத்து செல்லப் போகிறார் யோகி.
காசி தமிழ் சங்கமம் மாதிரி, இங்கு கவர்னர்கள் சங்கமம் நடக்க வேண்டும் என உ.பி., முதல்வர் விரும்புகிறார்.