உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளாகியும், ஜாதிய கட்டுப்பாடுகளை உடைக்க முடியவில்லை. ஜாதி ரீதியாகத் தான் இடுகாடு மற்றும் சுடுகாடுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. வாழ்க்கையின் கடைசி பயணத்திலாவது, சமத்துவம் ஆரம்பமாக வேண்டும்...
'இந்த, 21ம் நுாற்றாண்டிலும், உடலை புதைப்பதில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது சரியல்ல. இந்தச் சூழ்நிலை மாற வேண்டும். அனைத்து சமூகத்தினருக்குமான, பொது மயானத்தை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
![]()
|
கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும், இறந்தவர்களின் உடலை எந்த பாகுபாடும் காட்டாமல் புதைக்கின்றனர். கிறிஸ்துவர்கள், இறந்தவரின் உடலை சர்ச்சுக்கு உள்ளே கொண்டு சென்று, பாதிரியார் முறைப்படி பிரார்த்தனை செய்த பின்னரே, அடக்கம் செய்கின்றனர்.
ஆனால், ஹிந்து கோவில்களுக்குள், இறந்தவரின் உடலை கொண்டு சென்று, அவரது ஆன்மா சாந்தி அடையும்படி பிரார்த்தனை செய்யும் வழக்கம் இல்லை; காரணம், அது தீட்டு என்று சொல்வர்.
ஹிந்து மதத்தில், இறந்தவர்களின் உடலை பெரும்பாலும் எரிக்கும் வழக்கமே உள்ளது. பட்டினத்தார் தன் தாய்க்கு மரக்கட்டைகளை அடுக்கி எரியூட்டாமல், வாழைமர பட்டைகளை அடுக்கி தீமூட்டினார் என்று, கேள்விபட்டிருக்கிறோம். 'ஆண்டியும், அரசனும், அறிஞனும், அசடனும் ஒரே இடத்தில் உறங்குவதால், சமரசம் உலாவும் இடமே மயானம் தான்' என, திரைப்படம் ஒன்றில், பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார்.
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி கொள்கையைப் பின்பற்றும், திராவிட மாடல் ஆட்சி யாளர்கள், அனைத்து ஜாதியினருக்கும் பொதுவான இடமாக, மயானம் இருக்க சம்மதிக்க மாட்டார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி... இங்கே ஜாதிகள் அற்ற சமுதாயம் உருவாக வாய்ப்பே இல்லை. 'மனிதனின் கடைசி காலத்தில், மயானத்திலாவது சமத்துவம் பேணுங்கள்' என்ற நீதிபதிகளின் அறிவுரை, செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும் என்பதில், 'நோ டவுட்!'