வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிவகங்கை: ''தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தில் இறங்க தயங்க மாட்டோம்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் ஏ.செல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் நர்ஸ், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படியை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். முடக்கப்பட்ட சரண்டரை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
![]()
|
சி அண்ட் டி பிரிவினரை அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்வதை கண்டிக்கிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக எந்த கோரிக்கையும் தீர்க்கவில்லை.
டிச., 17 ல் சேலத்தில் நடக்கும் மாநில பேரவையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்துள்ளார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நடந்த ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.
நியாயமான கோரிக்கைகளை தீர்க்காத பட்சத்தில் போராடித்தான் அவற்றை வென்றெடுப்போம், என்றார்.