சென்னை : ''ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம்செய்வது இயலாத காரியம்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்திய, மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான, 15 பேருக்கு, ஐ.டி.சி., கிராண்ட் சோழ நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஆணையை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஐ.டி.சி., நிறுவனத்தை போல், பல தனியார் தொழில் நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தர முன்வர வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் வேலை இன்றி வாழ்தாரத்திற்கு கஷ்டப்படும் நிலை இல்லை என்ற சூழல் உருவாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்களுக்கு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு சேர்க்கையில், 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற வகையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
இந்தாண்டும், 50 சதவீதம் இடங்களை மாநில அரசு நிரப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 402 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களில், 201 இடங்கள், தமிழக மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது.
'முதல்வர்' காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் காப்பீடு திட்டத்துடன், 'உயிர் காப்போம்' திட்டத்தையும் இணைத்து உள்ளோம்.
இந்த திட்டத்தில், 116 கோடி ரூபாய் செலவில், 1.17 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், 98.35 லட்சம் பேர் பயன் அடைந்துஉள்ளனர்.
ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது இயலாத காரியம். இதை, ஏற்கனவே தெரிவித்து உள்ளோம்.
![]()
|
கடந்த காலங்களில், ஒப்பந்த பணியாளர்களை விருப்பம்போல் எடுத்து விட்டனர்.
இது, ஒப்பந்த பணியாளர்களுக்கு தெரியும். இருந்தாலும், போராடி பார்க்கலாம் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், ஒப்பந்த பணியாளர்கள், எம்.ஆர்.பி., தேர்வுகள் எழுதி தேர்வானால், பணி நிரந்தரம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில், லஞ்சம் பெறுவது யாராக இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொது சுகாதாரத்துறை மாநாடு, வரும், 5ம் தேதி, மாமல்லபுரத்தில் துவங்க உள்ளது.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.