இந்திய நிகழ்வுகள்
மாணவியருக்கு பாலியல் தொல்லை பேராசிரியர்கள் இருவர் கைது
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீர் மற்றும் தெலுங்கானாவில் மாணவியர் அளித்த பாலியல் புகாரின்படி பல்கலை பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலை மாணவி ஒருவர், ஒரு பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொமாய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, பல்கலை வளாகத்தில் மாணவியர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். உடனே பல்கலை பதிவாளர் அவரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
மற்றொரு புகார்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலையில், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு மாணவி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை, பாடத்தில் உள்ள சந்தேகத்தை கேட்பதற்காக, தன் பேராசிரியர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர், மாணவியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து, மாணவி அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து, 62 வயதான பேராசிரியரை கைது செய்தனர்.
ராஜஸ்தானில் பிரபல தாதா சுட்டுக் கொலை
சிகார்-ராஜஸ்தானில் பிரபல தாதா ராஜு தேத், சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த தாதா ராஜுவை, அவருடைய வீட்டு வாசலில் வைத்து நான்கு பேர் சரமாரியாக சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே 'ராஜு கொலைக்கு நான் தான் காரணம்' என, மற்றொரு தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ரோஹித் கோதரா என்பவர் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார்.
பிரபல தாதாக்கள் ஆனந்த்பால் சிங், பல்பீர் பனுடா ஆகியோர் மரணத்துக்கு பழி தீர்க்கவே, இந்த கொலையை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எஸ்.பி., குன்வர் ராஷ்ட்ரதீப் கூறுகையில், ''தப்பியோடியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. எல்லை பகுதிகள் அடைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன,'' என்றார்.
தமிழக நிகழ்வுகள்
கலெக்டர் அலுவலக ஊழியர் பெயரில் மோசடி: வாலிபர் கைது
ராமநாதபுரம் : நயினார்கோவில் அருகே கொட்டகுடியை சேர்ந்த சமயதுரை மகன் நாராயணசாமி 20. இவர் பரமக்குடி மின்வாரியத்தில்வேலை செய்கிறார். இவரது தம்பி ஆனந்தராஜ் நவ.17 ல் மின்சாரம் தாக்கி பலியானார். முதல்வர் நிவாரணத்திற்கு ஆனந்தராஜ் தந்தை சமயராஜ் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு காரில் வந்த டிப்டாப் ஆசாமி, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து இருந்த நிவாரண தொகை ரூ.3 லட்சம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
சரி பார்க்கும் பணிக்காக ஆதார், வங்கி கணக்கு புத்தகம் இவற்றுடன் நாராயணசாமியிடம் இருந்து ரூ.4500 வாங்கி சென்றார். அதன் பின், இதுகுறித்து வி.ஏ.ஓ.,விடம் விசாரித்த போது ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நின்றிருந்த மோசடி ஆசாமியை பொதுமக்கள் உதவியுடன் நாராயணசாமி பிடித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தூட்டாப்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரபு 38, என தெரிய வந்தது. அவரை கைது செய்து மேலும் ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா, என விசாரிக்கின்றனர்.
போக்சோவில் இளைஞர் கைது
கொடைரோடு : சிறுமலை அடிவாரத்தில் வசித்த பழங்குடியினர் சிறுமியை சடையாண்டிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் 39, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். அம்மையநாயக்கனுார் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, போக்சோவில் அவரை கைது செய்தார்.
போலி ஆவணம் தயாரித்த இருவர் கைது
சென்னை:சென்னை அடுத்த அம்பத்துாரில், அரசு முத்திரையை போலியாக பயன்படுத்தி ஜாதி, பிறப்பு, இறப்பு, பள்ளி சான்றிதழ், பட்டா உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாகவும், இதற்காக 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வாங்கப்படுவதாகவும், அம்பத்துார் தாசில்தார் ராஜசேகரிடம், பொதுமக்கள் புகார் கூறினர்.
தாசில்தார் புகாரையடுத்து விசாரித்த அம்பத்துார் போலீசார், ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த வின்சென்ட், 85, சோழம்பேட்டையைச் சேர்ந்த பினு, 41 ஆகியோரை, நேற்று மாலை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 50 போலியான சான்றிதழ்கள், அரசு முத்திரை உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் அம்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் வின்சென்ட், ஏற்கனவே 2016ல் போலி ஆவணங்கள் தயாரித்ததாக கைது செய்யப்பட்டவர்.
ரூ.10 லட்சம் 'குட்கா' பறிமுதல்
சேலம்:சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை, மேச்சேரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சாத்தப்பாடியில், மேச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடக பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தில், 57 மூட்டைகளில் 'ஹான்ஸ், குட்கா' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
அதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய். வாகனத்தை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ், 24, என தெரிந்தது. பெங்களூருவில் வாங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்க எடுத்து செல்வதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பட்டப் பகலில் திருட்டு போலீஸ் விசாரணை
அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடி மனைவி இந்திரா, 50; இவர், 1ம் தேதி, காலையில் வீட்டை பூட்டிக்கொண்டு கூலி வேலைக்குச் சென்றிருந்தார்.
மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 4 சவரன் நகை, வெள்ளிக் கொலுசு, 50 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தலைமையாசிரியை 'சஸ்பெண்ட்'
தேனி:தேனிமாவட்டம் க.மயிலாடும்பாறை ஒன்றியம் காமராஜர்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஈஸ்வரி 53.
இவர் பழைய விலையில்லா பாடப் புத்தகங்களை பழைய பேப்பராக எடைக்கு போட்டுள்ளார். இதன் எடை 250கிலோ ஆகும். இது குறித்த புகாரில் கல்வித்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில் புத்தகங்களை எடைக்கு போட்டதை இவர் ஒப்புக்கொண்டார். இதனால் மாவட்ட தொடக்கல்வி அலுவலர் கலாவதி, இவரை 'சஸ்பெண்ட்' செய்தார்.
Advertisement